அவினாசி பேரூராட்சி அலுவலகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு குறித்த ஆலோசனை கூட்டம்


அவினாசி பேரூராட்சி அலுவலகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு குறித்த ஆலோசனை கூட்டம்
x
தினத்தந்தி 2 April 2020 3:00 AM IST (Updated: 2 April 2020 2:22 AM IST)
t-max-icont-min-icon

அவினாசி பேரூராட்சி அலுவலகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட வியாபாரிகள் சமூக இடைவெளி விட்டு அமர்ந்திருந்தனர்.

அவினாசி, 

அவினாசி பகுதி வணிகர்கள், மளிகை கடைகள், இறைச்சி கடைகளில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்து அறிவுறுத்தும் வகையில் அவினாசி பேரூராட்சி அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு அவினாசி துணை போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கர் தலைமை தாங்கினார். பேரூராட்சி செயல் அலுவலர் ஈஸ்வரமூர்த்தி, இன்ஸ்பெக்டர் இளங்கோ, துப்புரவு ஆய்வாளர் கருப்புசாமி, துணைதாசில்தார் பபிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் மளிகை கடை, இறைச்சி கடை, தினசரி மார்க்கெட் கடை வியாபாரிகள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கர் பேசியதாவது:-

இறைச்சிக்கடைகளில் பார்சல் மட்டுமே வழங்க வேண்டும். எக்காரணம் கொண்டும் கடைகளில் இறைச்சி வெட்டி விற்பனை செய்யக்கூடாது. அரைக்கிலோ, கால் கிலோ, ஒரு கிலோ என பார்சல் செய்து கொண்டு வந்து விற்பனை அல்லது டோர்டெலிவரி செய்யலாம். கடைகளில் முன்புறம் சமூக இடைவெளி விட்டு இருக்க வேண்டும். மளிகைக்கடைக்காரர்கள், பொதுமக்களிடம் தெரிவிக்கும் வகையில் தொலைபேசி எண்களை விளம்பரப்படுத்தி டோர் டெலிவரி செய்யலாம். உடல் நிலை சரி இல்லாதவர்களுக்கு இறைச்சி விற்பனை செய்யக்கூடாது.

முக கவசம் அணிந்து வருபவர்களுக்கு மட்டுமே இறைச்சி விற்பனை செய்ய வேண்டும். காய்கறி மற்றும் பழங்கள் போன்றவற்றை கடை உரிமையாளர்களே எடுத்து பொதுமக்களுக்கு கொடுக்க வேண்டும். பொதுமக்களை காய்கறி மற்றும் பழங்களை தொட அனுமதிக்கக்கூடாது. மேலும் மேற்கண்ட நிபந்தனைகளை மீறும் நிறுவனங்கள் மீது ஊரடங்கு உத்தரவு முடியும் வரை கடையை பூட்டி சீல் வைக்கப்படும்.

அதேபோல் பொதுமக்கள் அடிக்கடி வீட்டை விட்டு வெளியே வந்து அத்தியாவசியப்பொருட்களை வாங்காமல் ஒரே முறை வந்து 3 நாட்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிச்சென்று இருப்பு வைத்துக்கொள்ளவும் குழந்தைகள் மற்றும் பெரியவர்களை மக்கள் அதிகம் வரக்கூடிய இடங்களுக்கு அழைத்து வரவேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.

செயல் அலுவலர் ஈஸ்வரமூர்த்தி பேசுகையில் அவினாசி புதிய பஸ் நிலையம் தினசரி மார்க்கெட்டில் செயல்படும் காய்கறி மற்றும் பழ விற்பனை கடைகளில் சமூக இடைவெளி பின்பற்ற வேண்டியதை கருத்தில் கொண்டு ஊரடங்கு உத்தரவு முடியும் வரை மாவட்டத்தின் மற்ற பகுதிகளில் செயல்படுத்தப்பட்டுள்ளது போல் புதிய பஸ் நிலையத்திற்குள் காய்கறி, பழக்கடைகள் மாற்றம் செய்து கொடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

Next Story