ஊரடங்கு உத்தரவை மீறி சுற்றித்திரிந்தவர்கள் மீது வழக்கு


ஊரடங்கு உத்தரவை மீறி சுற்றித்திரிந்தவர்கள் மீது வழக்கு
x
தினத்தந்தி 2 April 2020 3:45 AM IST (Updated: 2 April 2020 3:31 AM IST)
t-max-icont-min-icon

ஊரடங்கு உத்தரவை மீறி சுற்றித்திரிந்தவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

கல்பாக்கம், 

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்த லத்தூர் ஒன்றியம் அணைக்கட்டு போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பவுஞ்சூர் மற்றும் சுற்றுப்புறங்களில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமசாமி தீவிர சோதனையில் ஈடுபட்டு இருந்தார். அப்போது ஊரடங்கு உத்தரவை மீறி சாலைகளில் மோட்டார் சைக்கிளில் சுற்றித்திரிந்த 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்ததுடன், அவர்களது வாகனங்களையும் பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றார்.

இதேபோல் அச்சரப்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் டி.எஸ்.சரவணன், சப்-இன்ஸ்பெக்டர்கள் ஏ.நாகராஜன், கோ.பாரதி, ப.சிவராஜ் மற்றும் போலீசார் அச்சரப்பாக்கம் பகுதியில் ஊரடங்கு உத்தரவை மீறி சுற்றி திரிந்த 20 பேரை கைது செய்து ஜாமீனில் விடுவித்தனர். அவர்களிடம் இருந்து 17 மோட்டார் சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

அதேபோல் திருக்கழுக்குன்றம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முனிசேகர் திருக்கழுக்குன்றம் மற்றும் சுற்றுப்புறங்களில் ஊரடங்கு உத்தரவை மீறிய 12 பேரை அவர்களது வாகனங்களுடன் போலீஸ் நிலையம் கொண்டு சென்றார். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ததுடன், அனைவரையும் வரிசையில் நிற்க வைத்து கொரோனா வைரஸ் பரவலை தடுக்க உறுதியாக இருப்பேன் என்றும், ஊரடங்கு தடை உத்தரவை மீறமாட்டேன் எனவும் உறுதி மொழி ஏற்க செய்தார்.

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க திருக்கழுக்குன்றம் பேரூராட்சி மன்ற அலுவலகம் சார்பில் 18 வார்டுகளிலும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் ஸ்ரீதரன் மற்றும் மேற்பார்வையாளர் சத்ய நாராயணன் தலைமையிலான பணியாளர்கள் 4 சிறிய டேங்கர் லாரிகள் மூலம் பேரூராட்சி மன்ற பஸ் நிலையம், செங்கல்பட்டு-கல்பாக்கம் சாலை, மார்க்கெட் பகுதி, மாமல்லபுரம் சாலை உட்பட அனைத்து வீதிகளிலும் கிருமிநாசினி தெளித்தனர்.

Next Story