சென்னை, ஈரோடு பகுதிகளில் இருந்து திருவாடானைக்கு வந்த 24 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் - கலெக்டர் தகவல்
சென்னை, ஈரோடு பகுதிகளில் இருந்து திருவாடானைக்கு வந்த 24 பேர் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் நகராட்சிக்கு உட்பட்ட கேணிக்கரை பகுதியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் தீயணைப்பு துறை, மீட்பு பணி துறை ஆகியவை சார்பில் கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொது இடங்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. இதனை மாவட்ட கலெக்டர் வீரராகவ ராவ் பார்வையிட்டார். அதன் பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
வெளிநாடுகளில் இருந்து ராமநாதபுரம் மாவட்டத்திற்கு 4 ஆயிரத்து 125 பேர் திரும்பி வந்துள்ளனர். அவர்களில் 1,428 பேரை 30 நாட்கள் தனிமைப்படுத்துதல் காலம் முடிவடைந்து கொரோனா அறிகுறி இல்லாமல் நலமுடன் உள்ளனர். மீதமுள்ள 2 ஆயிரத்து 697 பேர் தற்போது அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களின் வீடுகளில் மாவட்ட நிர்வாகம் மூலம் ஸ்டிக்கர் ஒட்டி அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
மாவட்டத்திற்கு வந்து ஊர் திரும்ப முடியாத 174 வெளிமாநில பக்தர்கள், சுற்றுலா பயணிகள், 1,044 வெளிமாநில தொழிலாளர்கள், ஆதரவற்ற நிலையில் உள்ள 354 பேர் கண்டறியப்பட்டுள்ளனர். இதேபோல வெளிமாநிலங்களில் இருந்து 761 பேர் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு திரும்பியுள்ளனர். இவர்கள் அனைவரையும் ஆங்காங்கே உள்ள பொது கட்டிடங்களில் தனிமைப்படுத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவர்களுக்கு போதிய உணவு, குடிநீர், உடை, மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
திருவாடானை தாலுகா நகரிகாத்தான் கிராமத்தை சேர்ந்தவர்கள் ஈரோடு மாவட்டத்தில் வசித்து வருகின்றனர். அவர்களில் 8 பேர் ஒரு துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக திருவாடானைக்கு வந்தனர். அவர்களை சுகாதாரத்துறை அதிகாரிகள் பரிசோதனை செய்ததுடன் அனைவரையும் ராமநாதபுரம் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் தங்க வைத்துள்ளனர்.
அங்கு அவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதா என்பதை கண்டறிய ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னையில் இருந்து வந்த 16 பேர் திருவாடானை அருகே உள்ள கருமொழி சோதனைச்சாவடியில் சோதனை செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் அனைவரும் ராமநாதபுரத்தில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Related Tags :
Next Story