கொரோனா தடுப்பு பணிகள்: அரசு மருத்துவமனைகளில் அமைச்சர் ஆய்வு
மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து அமைச்சர் பாஸ்கரன் ஆய்வு செய்தார்.
சிவகங்கை,
மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் கலெக்டர் ஜெயகாந்தன் தலைமையிலும், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரோஹித்நாதன் ராஜகோபால் முன்னிலையிலும் நடைபெற்றது. கூட்டத்தில் அமைச்சர் பாஸ்கரன் கலந்துகொண்டு பேசியதாவது:-
கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க பல்வேறு துறைகள் மூலம் தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுமக்களின் நலன் கருதி ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமலில் உள்ளது. பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்க வேண்டும் என்பதற்காக பால், இறைச்சி, மீன், மளிகை பொருட்கள், மருந்தகங்கள், ஓட்டல்கள், காய்கறி கடைகள் செயல்பட உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் முழு ஒத்துழைப்புடன் மற்றவர்களிடமிருந்து 1 மீட்டர் இடைவெளி விட்டு நின்று பொருட்களை வாங்கிச் செல்ல வேண்டும்.
அதேபோல் வியாபாரிகள் தங்களுக்கு தேவையான பொருட்களை கொள்முதல் செய்வதற்கு எவ்வித தடையும் இல்லை. சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்திலுள்ள அம்மா உணவகத்தில் 3 வேளையும் உணவு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோல் நகராட்சித்துறை, பேரூராட்சித்துறை, தீயணைப்புத்துறை ஒருங்கிணைந்து மருத்துவமனை வளாகங்கள், அம்மா உணவகங்கள், மக்கள் கூடும் காய்கறி கடை மற்றும் நகரின் முக்கிய வீதிகளில் நாள்தோறும் கிருமிநாசினி தெளிக்க வேண்டும் மேலும் விவசாயிகள் கிராமப்பகுதிகளில் விளையும் காய்கறிகளை விற்பனை செய்வதற்கு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக, கூட்டத்தில் கலந்துகொண்ட அனைவருக்கும் அமைச்சர் பாஸ்கரன் முக கவசம் வழங்கினார். தொடர்ந்து, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று சமீபத்தில் வெளிமாநிலத்திற்கு சென்று வந்துள்ள 26 பேர் தனிமைப்படுத்தி சிகிச்சை வழங்கப்பட்டு வருவதை அமைச்சர் பார்வையிட்டார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் லதா, அரசு மருத்துவக் கல்லூரி டீன் ரத்தினவேல், மருத்துவத்துறை இணை இயக்குனர் இளங்கோ மகேஸ்வரன், சுகாதாரத்துறை துணை இயக்குனர் யசோதாமணி, மகளிர் திட்ட அலுவலர் அருண்மணி, பூச்சியியல் வல்லுனர் ரமேஷ் மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மேலும் சிவகங்கை கீழப்பூங்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் காளையார்கோவில் அருகே மறவமங்கலத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை அமைச்சர் ஆய்வு செய்தார். ஆய்வின்போது மறவமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் அன்பழகன், வட்டார மருத்துவ அலுவலர்கள் ராகவேந்திரன், சத்யபாமா ஆகியோர் உடனிருந்தனர்.
இதேபோல் மானாமதுரை, திருப்புவனம் அரசு மருத்துவமனைகளிலும் அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது கலெக்டர் ஜெயகாந்தன், மானாமதுரை தொகுதி எம்.எல்.ஏ. நாகராஜன், கோட்டாட்சியர் (பொறுப்பு) சிந்து, குடும்ப நல துணை இயக்குனர் யோகவதி, தாசில்தார் மூர்த்தி, மண்டல துணை தாசில்தார் செல்லமுத்து, பேரூராட்சி செயல் அலுவலர் சந்திரகலா உள்பட அரசு அதிகாரிகள் பலர் இருந்தனர்.
Related Tags :
Next Story