14 கிலோ மீட்டர் நடந்தே வந்த வடமாநில தொழிலாளர்களிடம் பரிவு காட்டிய மார்த்தாண்டம் போலீசார் - உணவு கொடுத்து திருப்பி அனுப்பினர்
சொந்த ஊருக்கு செல்ல 14 கிலோ மீட்டர் நடந்தே வந்த வடமாநில தொழிலாளர்கள் போலீசிடம் சிக்கினர். பின்னர் அந்த தொழிலாளர்களுக்கு உணவு கொடுக்க ஏற்பாடு செய்ததோடு, அவர்கள் வேலை பார்த்த இடத்துக்கே திருப்பி அனுப்பினர்.
குழித்துறை,
நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் வீட்டுக்குள்ளே தற்போது முடங்கி உள்ளனர். அதே சமயத்தில், பிழைப்புக்காக வெளி மாநிலங்களுக்கு வந்த வடமாநில தொழிலாளர்கள் ஏராளமானோர் உணவின்றி தவிப்பது தெரிய வந்தது. செய்வதறியாமல் திகைத்த தொழிலாளர்கள், டெல்லி, கேரளா மற்றும் பல்வேறு இடங்களில் ஒரே இடத்தில் திரண்டு போராட்டத்தில் குதித்தனர்.
சொந்த ஊருக்கு செல்ல பஸ்கள், ரெயில் வசதி ஏற்படுத்த கோரிக்கை விடுத்தனர். ஊரடங்கு உத்தரவை மீறி ஒரே இடத்தில் குவிந்ததால் இந்த தொழிலாளர்கள் கொரோனா பரவலுக்கு காரணமாகி விடுவார்களோ என்ற அச்சம் ஏற்பட்டது. மேலும் இதற்கு கண்டன குரலும் எழுந்தன.
இந்த சம்பவத்தை அடுத்து வடமாநில தொழிலாளர்களுக்கு தேவையான உணவு மற்றும் வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டது. மேலும் அவர்களை சொந்த ஊருக்கு செல்ல அனுமதிக்காதீர்கள் என்றும் தெரிவித்தது.
இந்த நிலையில் தேங்காப்பட்டணம் துறைமுகத்தில் மீன்பிடி தொழிலுக்கு உதவியாக இருந்த (ஐஸ் கட்டிகளை உடைக்கும் பணி) வடமாநில தொழிலாளர்கள் 10 பேர் உணவின்றி பரிதவித்ததாக தெரிகிறது. உணவுக்காக சக மீனவர்களின் உதவியை நாடி வந்துள்ளனர். தொடர்ந்து இதே நிலை இருந்ததால், அவர்கள் சொந்த ஊருக்கு சென்று விடலாம் என்று முடிவெடுத்தனர். ஆனால், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பஸ்கள், ரெயில்கள் இயக்கப்படாததால் எப்படி செல்வது? என்று நினைத்த போது, அவர்களை வேலைக்கு அனுப்பிய ஏஜெண்டை தொடர்பு கொண்டு பேசியுள்ளனர்.
குழித்துறை ரெயில் நிலையத்தில் இருந்து சரக்கு ரெயில் இயக்கப்படுகிறது, அதில் ஏறி எப்படியாவது, சொந்த ஊருக்கு சென்று விடுங்கள் என்று அவர் தொழிலாளர்களிடம் கூறியுள்ளார். இதனை உண்மை என நம்பிய தொழிலாளர்களும் நேற்றுமுன்தினம் இரவு தேங்காப்பட்டணம் துறைமுகத்தில் இருந்து குழித்துறை ரெயில் நிலையம் நோக்கி நடந்தனர்.
பொடி நடையாய் சுமார் 14 கிலோ மீட்டர் நடந்தபடி மார்த்தாண்டம் வெட்டுமணிக்கு வந்த போது, ரோந்து பணியில் ஈடுபட்ட சப்-இன்ஸ்பெக்டர்கள் விஜயன், முத்துமாரி மற்றும் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். பின்னர் போலீசார் விசாரணை நடத்திய போது, உணவின்றி தவித்த நாங்கள், குழித்துறையில் இருந்து ரெயில் ஏறி சொந்த ஊருக்கு செல்வதற்கு வந்ததாக தெரிவித்துள்ளனர்.
ரெயில் ஓடாது என்பது கூட தெரியாமல் வந்த வடமாநில தொழிலாளர்களின் நிலைமையை உணர்ந்த போலீசார் அவர்களுக்கு உணவு கொடுக்க ஏற்பாடு செய்தனர். காங்கிரஸ் சேவாதள தலைவர் ஜோசப் தயாசிங் என்பவர் உணவு தயாரித்து அவர்களுக்கு கொடுத்தார். பின்னர் போலீசார், தேங்காப்பட்டணம் துறைமுகத்தில் உள்ள மீனவர்களை வரவழைத்து வடமாநில தொழிலாளர்களை அவர்களுடன் அனுப்பி வைத்தனர்.
வடமாநில தொழிலாளர்கள் 10 பேர் சொந்த ஊருக்கு செல்வதற்காக 14 கிலோ மீட்டர் நடந்து வந்த சம்பவம் அவர்களுடைய சோகத்தின் பிரதிபலிப்பாக உள்ளது. எனவே, அந்த தொழிலாளர்களுக்கு சக மீனவர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும், மேலும் மாவட்ட நிர்வாகமும் அவர்களுக்கு உணவு வழங்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story