கொரோனா அறிகுறி உள்ளதா? நீலகிரியில் 7 ஆயிரம் வீடுகளில் சுகாதாரத்துறையினர் கணக்கெடுப்பு


கொரோனா அறிகுறி உள்ளதா? நீலகிரியில் 7 ஆயிரம் வீடுகளில் சுகாதாரத்துறையினர் கணக்கெடுப்பு
x
தினத்தந்தி 2 April 2020 2:18 AM GMT (Updated: 2 April 2020 2:18 AM GMT)

கொரோனா அறிகுறி உள்ளதா? என்று நீலகிரி மாவட்டத்தில் 7 ஆயிரம் வீடுகளில் சுகாதாரத்துறையினர் கணக்கெடுப்பில் ஈடுபடுகின்றனர்.

ஊட்டி,

சமீபத்தில் டெல்லியில் நடைபெற இருந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள சென்று திரும்பியவர்களில் சிலருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அங்கிருந்து நீலகிரி திரும்பிய 8 பேர் ஊட்டி அரசு தலைமை மருத்துவமனை தனி வார்டில் அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் டெல்லியில் இருந்து விமானம் மூலம் பெங்களூருவுக்கு வந்து, அங்கிருந்து நீலகிரிக்கு வந்தது தெரியவந்து உள்ளது. 8 பேரின் வீடுகள் முன்பு கொரோனா தனிமைப்படுத்தப்பட்டதற்கான நோட்டீஸ் ஒட்டப்பட்டு இருக்கிறது.

அவர்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட சமயங்களில் வெளியே எங்கும் சென்று வந்தார்களா, வீட்டிற்கு உறவினர்கள் யாரேனும் வந்தார்களா, வீட்டில் உள்ள மற்ற நபர்களுக்கு சளி, காய்ச்சல், இருமல் உள்ளதா என சுகாதாரத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். ஊட்டி காந்தல் பகுதியை சேர்ந்த 2 பேர் டெல்லி சென்று திரும்பினர். அவர்களது வீடுகள் மற்றும் சுற்றுப்புற பகுதிகள் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டு இருக்கிறது.

இதற்கிடையே நேற்று 2-வது நாளாக சுகாதாரத்துறையினர் வீடு, வீடாக கொரோனா அறிகுறி உள்ளதா? என்று கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டனர். வீட்டில் வசிப்பவர்களுக்கு காய்ச்சல், சளி, இருமல், மூச்சுத்திணறல் இருக்கிறதா, சமீபத்தில் வெளியிடங்களுக்கு யாரேனும் சென்று வந்தார்களா என்ற விவரங்களை கேட்கப்பட்டு பதிவு செய்யப்பட்டது. மேலும் கொரோனா வைரஸ் பரவும் விதம், அறிகுறிகள், தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப் பட்டன.

காந்தல், பிங்கர்போஸ்ட் பகுதிகளில் உள்ள 5 ஆயிரம் வீடுகளில் 5 டாக்டர்கள், 150 சுகாதார பணியாளர்கள் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். அதேபோல் குன்னூரில் 1,200 வீடுகள், கோத்தகிரியில் 600 வீடுகளில் என நீலகிரியில் மொத்தம் 7 ஆயிரம் வீடுகளில் கணக்கெடுப்பு பணி நடக்கிறது. ஊட்டி காந்தல் பகுதி தனிமைப்படுத்தப்பட்டதை அடுத்து, நகராட்சி சார்பில் தெருக்கள் மற்றும் சாலைகளில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக வாகனங்கள் மூலம் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. சாலையோரங்களில் நிறுத்தி வைக்கப்பட்ட வாகனங்களுக்கும் தெளிக்கப்பட்டன. 

Next Story