சொந்த ஊருக்கு அழைத்துச்செல்வதற்காக வடமாநில தொழிலாளர்களை ஏற்றி வந்த 5 லாரிகள் பறிமுதல் - டிரைவர்களை கைது செய்து போலீசார் விசாரணை
சொந்த ஊருக்கு அழைத்துச்செல்வதற்காக வடமாநில தொழிலாளர்கள் 250 பேரை ஏற்றி வந்த 5 லாரிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அந்த லாரிகளை ஓட்டி வந்த டிரைவர்களும் கைது செய்யப்பட்டனர்.
கோவை,
கோவை மாவட்டத்தில் உள்ள அன்னூர், பொள்ளாச்சி, சூலூர், கோவை மாநகர பகுதி, மேட்டுப்பாளையம் உள்பட பல்வேறு பகுதிகளில் வடமாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் ஏராளமானோர் தங்கி இருந்து வேலை செய்து வருகிறார்கள். கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க தற்போது ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளதால், போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டு உள்ளது. இதனால் அவர்கள் சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் தவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் கோவை சிங்காநல்லூர் போலீசார் ஆர்.ஜி.புதூர் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் அதிகாலையில் ரோந்து சென்றனர். அப்போது அந்த வழியாக டெல்லி மற்றும் அரியானா மாநிலத்தை சேர்ந்த 5 லாரிகள் வந்தன. உடனே போலீசார் அந்த லாரிகளை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.
அப்போது அந்த லாரிக்குள் 250 பேர் இருந்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை செய்தபோது, கோவை மாவட்டத்தில் வேலை செய்து வந்த வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதும், லாரிகளில் தங்கள் சொந்த ஊருக்கு செல்வதும் தெரியவந்தது.
தற்போது ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டு இருப்பது உங்களுக்கு தெரியுமா? என்று போலீசார் அவர்களிடம் கேட்டனர். அதற்கு அவர்கள் தெரியும். இருந்தாலும் இங்கு வேலை இல்லை, சாப்பாடும் கிடைக்கவில்லை. எனவே சொந்த ஊருக்கு சென்று ஏதாவது வேலை செய்து பிழைத்துக்கொள்வதாக தெரிவித்தனர்.
உடனே போலீசார் அந்த லாரிகளை ஓட்டி வந்த 5 பேரை பிடித்து விசாரணை நடத்தியபோது, அவர்கள் அனைவரும் டெல்லியை சேர்ந்த ராஜேந்திர சிங் (வயது 40), பிஷாந்த் (38), இந்தர்பால் சிங் (28), அனில்குமார் (28), முருகேஷ்பாட்டில் (32) என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அவர்கள் 5 பேரையும் கைது செய்ததுடன், 5 லாரிகளையும் பறிமுதல் செய்தனர். அத்துடன் அந்த லாரிகளில் இருந்த வடமாநிலத்தை சேர்ந்த 250 பேரையும் ஏற்கனவே அவர்கள் தங்கி இருந்த இடத்துக்கு அனுப்பி வைத்ததுடன், உணவுக்கு ஏற்பாடு செய்து கொடுப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து அந்த 250 பேரும் தாங்கள் தங்கி இருந்த இடத்துக்கு திரும்பி சென்றனர். அத்துடன் கைதான 5 பேரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Related Tags :
Next Story