வேலூர் அருகே, சாராயம் விற்பதை தட்டிக்கேட்டவர்கள் மீது கும்பல் துப்பாக்கி சூடு - குண்டு பாய்ந்து 3 பேர் காயம்


வேலூர் அருகே, சாராயம் விற்பதை தட்டிக்கேட்டவர்கள் மீது கும்பல் துப்பாக்கி சூடு - குண்டு பாய்ந்து 3 பேர் காயம்
x
தினத்தந்தி 1 April 2020 10:30 PM GMT (Updated: 2 April 2020 2:25 AM GMT)

வேலூர் அருகே சாராயம் விற்பதை தட்டிக்கேட்ட பொதுமக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. அதில் 3 பேர் காயமடைந்தனர்.

அடுக்கம்பாறை,

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் தமிழக அரசு 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. மேலும் பொதுமக்கள் கூடுவதை தவிர்க்கும் பொருட்டு டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டதால் மது பிரியர்கள் மது அருந்த முடியாமல் தவித்து வருகின்றனர். இதனை பயன்படுத்தி வேலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சாராய வியாபாரம் நடந்து வருவதாக கூறப்படுகிறது. வேலூரை அடுத்த அரியூர் அருகே புலிமேடு மலைப்பகுதியில் கும்பலாக சிலர் சாராயம் காய்ச்சி விற்பனை செய்து வருகின்றனர்.

அந்த மலைப்பகுதிக்கு சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த மது பிரியர்கள் பலர் சாராயம் குடிக்க சென்று வந்துள்ளனர். அதிகமானவர்கள் அங்கு சென்று வருவதால் கொரோனா பரவ வாய்ப்புள்ளதாக புலிமேடு பகுதி கிராம மக்கள் கருதினர். இதனால் அந்த மலைப்பகுதியில் சாராயம் விற்க கிராம பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் இங்கு ஏன் சாராயம் விற்கிறீர்கள் என கேட்டு அவர்களை கண்டித்ததோடு சாராயம் விற்கக்கூடாது என கூறியுள்ளனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த சாராய கும்பலை சேர்ந்தவர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த நாட்டு துப்பாக்கியை எடுத்து தங்களை கண்டித்தவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். அதில் பூபாலன் (வயது 30), சங்கர் (23), அண்ணாமலை (18) ஆகியோர் மீது குண்டுகள் பாய்ந்து, காயம் அடைந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

உடனே சாராயம் விற்ற கும்பலை சேர்ந்தவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். துப்பாக்கி சூட்டில் காயமடைந்த 3 பேரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்து அரியூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். அவர்கள் தப்பி ஓடிய சாராய கும்பலை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story