வெட்டிய கரும்புகள் வயலில் காயும் அவலம்: குருங்குளம் சர்க்கரை ஆலையில் அரவை 2 மணி நேரம் நிறுத்தம்


வெட்டிய கரும்புகள் வயலில் காயும் அவலம்: குருங்குளம் சர்க்கரை ஆலையில் அரவை 2 மணி நேரம் நிறுத்தம்
x
தினத்தந்தி 1 April 2020 10:00 PM GMT (Updated: 2 April 2020 4:14 AM GMT)

தஞ்சை அருகே குருங்குளம் சர்க்கரை ஆலையில் அரவை 2 மணி நேரம் நிறுத்தப்பட்டது. இதையடுத்து அதிகாரிகளுடன், விவசாயிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

தஞ்சாவூர்,

தஞ்சையை அடுத்த குருங்குளத்தில் அறிஞர் அண்ணா அரசு சர்க்கரை ஆலை உள்ளது. இந்த ஆலைக்கு தஞ்சை மற்றும் ஒரத்தநாடு, திருவோணம், கந்தர்வக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கரும்புகள் அரவைக்கு அனுப்பப்படும். அதன்படி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த ஆலையில் ஆண்டுக்கு 4 லட்சம் டன் வரை கரும்பு அரவை செய்யப்பட்டது.

நாளடைவில் உரிய விலை கிடைக்காததாலும், விவசாயிகள் மாற்று பயிர் சாகுபடி செய்ததாலும் கரும்பு சாகுபடி குறைந்தது. தற்போது ஆண்டுக்கு 2 லட்சத்து 20 ஆயிரம் டன் அரவை செய்யப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு அரவைப்பருவம் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதுவரை 1 லட்சத்து 55 ஆயிரம் டன் வரை அரவை செய்யப்பட்டுள்ளது.

மருங்குளம், விளார் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெட்டப்பட்ட கரும்புகள் ஆலைக்கு எடுத்துச்செல்லப்படாததால் வயல்களில் ஓரத்தில் கட்டி வைக்கப்பட்டு காய்ந்து வருகிறது.

இந்தநிலையில் நேற்று காலை 6 மணி முதல் 8 மணி வரை அரவைப்பணி திடீரென நிறுத்தப்பட்டது. இதனால் நீண்ட வரிசையில் வாகனங்களில் கரும்பு ஏற்றியபடி நின்று கொண்டிருந்தது. பின்னர் 8 மணிக்குப்பின்னர் மீண்டும் அரவை தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் கரும்பு விவசாயிகள் சங்க தலைவர் ராமநாதன், செயலாளர் கோவிந்தராஜ், ஒரத்தநாடு தலைவர் பாஸ்கர் மற்றும் கரும்பு விவசாயிகள் 50-க்கும் மேற்பட்டவர்கள் அங்கு திரண்டனர். பின்னர் அவர்கள் ஆலை நிர்வாக அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இது குறித்து கரும்பு விவசாயிகள் கூறியதாவது:-

குருங்குளம் சர்க்கரை ஆலை ஊழியர்கள், கொரோனா வைரஸ் பராமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விடுமுறை அளிக்க வேண்டும், மேலும் அவர்கள் பிற கோரிக்கைகளையும் வலியுறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் அரவைப்பணி 2 மணி நேரம் நிறுத்தப்பட்டது. இதையடுத்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி தினக்கூலி தொழிலாளர்களை வைத்து அரவை தொடங்கப்பட்டது.

இது குறித்து நாங்கள் அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினோம். தற்போது 1 லட்சத்து 55 ஆயிரம் டன் வரை அரவை செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள கரும்புகளை தேங்காமல் அரவை செய்ய வேண்டும். தற்போது வெளியூர்களில் இருந்து வெட்டுவதற்கு போதிய தொழிலாளர்கள் வந்துள்ளனர்.

இல்லையென்றால் கரும்புகளை அருகில் உள்ள பிற சர்க்கரை ஆலைக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். அல்லது பிற ஆலை ஊழியர்களை வரவழைத்து இந்த ஆண்டு கரும்பு அரவையை முழுமையாக முடிக்க வேண்டும். அடுத்த அரவைப்பருத்திற்கான கரும்புகளை வேண்டுமானால் வேறு ஆலைக்கு அனுப்பி விட்டு 1 ஆண்டு ஆலையை மூடுங்கள் என தெரிவித்தோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story