லட்சக்கணக்கான ரூபாய் நஷ்டம்: வேன்களில் கொண்டு வரப்பட்டு குப்பைக்கு போகும் குடைமிளகாய் - ஓசூர் விவசாயிகள் வேதனை
ஓசூர் பகுதியில் வேன்களில் கொண்டு வரப்பட்டு லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள குடைமிளகாய் குப்பையில் கொட்டப்பட்டு வருகின்றன.
ஓசூர்,
கொரோனா வைரஸ் பரவுதலை தடுக்கும் வகையில், நாடு முழுவதும் வருகிற 14-ந் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்த நிலையில், வாகன போக்குவரத்து இல்லாத காரணத்தினால் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியில் பயிரிடப்படும் காய்கறிகள், மலர்கள் உள்ளிட்ட விளைபொருட்களை சந்தைகளுக்கு கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக, விவசாய நிலங்களில் நாள்தோறும் பல வகையான மலர்களை டன் கணக்கில் குப்பைகளில் கொட்டப்படும் அவல நிலை நீடித்து வருகிறது. மலர்களை தொடர்ந்து, ஓசூர் பகுதியில் சாகுபடி செய்யப்படும் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள குடை மிளகாய்களையும் குப்பைகளில் கொட்டும் நிலை ஏற்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர், தேன்கனிக்கோட்டை, தளி, பாகலூர், சூளகிரி, உத்தனபள்ளி, கெலமங்கலம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பசுமைக்குடில்கள் அமைக்கப்பட்டு 1,000 ஏக்கர் பரப்பளவில் குடைமிளகாய்கள் பயிரிடப்பட்டுள்ளது. முன்பு குடை மிளகாய் சாகுபடி செய்யும் ஒவ்வொரு விவசாயிக்கும், 40 முதல் 50 டன் அளவிலான குடைமிளகாய்கள் விளைச்சல் கிடைக்கும்.
இதன் மூலம் நல்ல லாபமும் கிடைத்து வந்தது. இந்த குடைமிளகாய்கள், தமிழகம், கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, மராட்டியம், உத்தரபிரதேசம், மேற்கு வங்காளம் உள்ளிட்ட மாநிலங்களின் பல்வேறு பகுதிகளுக்கு லாரிகள் மூலம் அனுப்பப்பட்டு வந்தது. இந்த நிலையில், கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தற்போது பல மாநிலங்களில் குடைமிளகாய்களின் தேவை மிகவும் குறைந்து விட்டது.
இதனால் தோட்டங்களில் குடை மிளகாய்கள் பறிக்காவிட்டால், அவை அழுகி செடிகளில் நோய் உண்டாகும் என்ற அச்சத்தின் காரணமாக வேறு வழியின்றி, விவசாயிகள் தினமும் குடைமிளகாய்களை பறித்து டன் கணக்கில் குப்பைகளில் கொட்டி வருகின்றனர். இதனால் பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டு, விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுவதற்கு முன்பு 1 கிலோ குடை மிளகாய் 100 ரூபாய் வரை விலைபோனது என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story