கொரோனா வைரஸ் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு


கொரோனா வைரஸ் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு
x

கொரோனா வைரஸ் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

ஆலங்குடி,

திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம் ஆலங்காட்டில் 6-வது வார்டு தலைமையில், சரக்கு வாகனத்தில் மஞ்சள் கலந்து கிருமி நாசினி மற்றும் பிளச்சிங் பவுடர் தெளிக்கப்பட்டது. பின்னர் கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

அறந்தாங்கி அருகே விஜயபுரம் ஊராட்சியில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் பொருட்டு ஊராட்சி மன்ற தலைவர் சாந்திவிக்னேஷ்வரன் ஒவ்வொரு வீடு, வீடாக சென்று கிருமி நாசினி தெளித்து பிளச்சிங் பவுடர் போட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.

அரிமளம் ஒன்றியம், நெடுங்குடியில் ஒன்றிய குழு தலைவர் மேகலாமுத்து தலைமையில் கொரோனா வைரஸ் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. கைக்குளயான்வயல் ஊராட்சி கே.புதுப்பட்டி கடை வீதியில், பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் தடுப்பது குறித்து விழிப்பணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கி, அடிக்கடி கைகளை சோப்பு போட்டு கழுவ வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. மேலும் தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியே வராமல் வீட்டில் பாதுகாப்பாக இருக்க கேட்டு கொள்ளப்பட்டது.

அரிமளம் பேரூராட்சி பகுதியில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பேரூராட்சி செயல் அலுவலர் மணிகண்டன் தலைமையில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. பேரூராட்சி பகுதியில் தொடர்ந்து தூய்மை பணியில் ஈடுபடும் பணியாளர்களுக்கு பேரூராட்சி சமுதாய கூடத்தில் உணவு சமைத்து வழங்கப்பட்டது. மேலும் பேரூராட்சி பகுதி பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு உதவியாக மருந்து, மளிகை கடை, காய்கறி கடை உரிமையாளர்களின் பெயர் மற்றும் செல்போன் எண்கள் அடங்கிய துண்டு பிரசுரம் வழங்கப்பட்டன.

புதுக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் புதுக்கோட்டை நகராட்சி ஆணையர் சுப்பிரமணியன் தலைமையில் நகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் நகராட்சி பகுதிகளில் உள்ள சாலைகள், மருத்துவமனைகள், அரசு வாகனங்கள், போலீஸ் வாகனங்கள், அரசு அலுவலகங்கள், ரெயில் நிலையம் போன்றவற்றில் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பணிகளை தஞ்சாவூர் நகராட்சி நிர்வாக ஆணையர் உமா மகேஸ்வரி பார்வையிட்டு ஆலோசனை வழங்கினார்.

அப்போது அவர் பழைய பஸ் நிலையம் பகுதியில் போலீஸ் வாகனம், இருசக்கர வாகனம் மற்றும் ரவுண்டானா பகுதியில் கிருமி நாசினி தெளித்ததை பார்வையிட்டார். தொடர்ந்து அம்மா உணவகத்தை பார்வையிட்டு, அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார். இந்த ஆய்வின்போது நகராட்சி ஆணையர் சுப்பிரமணியன், நகர்நல அலுவலர் யாழனி மற்றும் நகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள் பலர் உடன் இருந்தனர்.

Next Story