பெங்களூருவில் இருந்து 1,500 பேர் திரும்பிய கிராமத்தில் சுகாதாரத்துறையினர் ஆய்வு - எல்லையில் தடுப்புகள் அமைத்து கண்காணிப்பு


பெங்களூருவில் இருந்து 1,500 பேர் திரும்பிய கிராமத்தில் சுகாதாரத்துறையினர் ஆய்வு - எல்லையில் தடுப்புகள் அமைத்து கண்காணிப்பு
x
தினத்தந்தி 2 April 2020 10:32 AM IST (Updated: 2 April 2020 10:32 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் இருந்து 1,500 பேர் திரும்பிய கிராமத்தில் சுகாதாரத்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். மேலும் கிராம எல்லையில் தடுப்புகள் அமைத்து கண்காணிப்பு பணி மேற்கொண்டு வருகிறார்கள்.

பாப்பாரப்பட்டி,

தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே உள்ள கிட்டனஅள்ளி கிராமத்தில் 452 குடும்பங்களை சேர்ந்த 2 ஆயிரம் பேர் வசித்து வருகிறார்கள். இந்த கிராமத்தை சேர்ந்த 1,500-க்கும் மேற்பட்டோர் இரும்பு வியாபாரம், பழைய காகித வியாபாரம், கட்டிட தொழிலுக்காக பெங்களூருவிற்கு இடம்பெயர்ந்து உள்ளனர்.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் பீதி காரணமாக இந்தியா முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால் பெங்களூருவில் தங்கியிருக்கும் 1,500-க்கும் மேற்பட்டோர் தங்கள் சொந்த கிராமமான கிட்டனஅள்ளிக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு திரும்பினர். இதுபற்றி தகவல் அறிந்த சுகாதாரத்துறையினர் இந்த கிராமத்தில் முகாமிட்டு பெங்களூருவில் இருந்து சொந்த ஊர் திரும்பியவர்களை கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.

பெங்களூருவில் இருந்து திரும்பியவர்கள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு சளி, இருமல், காய்ச்சல், சுவாச பிரச்சினை உள்ளிட்ட அறிகுறிகள் இருக்கிறதா? என்பதை கண்காணிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணியை ஊராட்சி தலைவர் வெண்ணிலா முருகன், கிராம நிர்வாக அலுவலர் ரவீந்திரன், ஊராட்சி செயலர் சுமதி, சுகாதார செவிலியர்கள் சத்தியவாணி, சுபத்ரா மற்றும் தூய்மை பணியாளர்கள் அடங்கிய குழுவினர் மேற்பார்வை செய்து வருகிறார்கள். பெங்களூருவில் இருந்து வந்தவர்களை வீடுகளில் தனிமைப்படுத்தி உடல்நிலையை கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. அதற்கான நோட்டீஸ்கள் சம்பந்தப்பட்ட வீடுகளில் ஒட்டப்பட்டுள்ளன.

கொரோனா வைரஸ் தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன. இந்த கிராமத்தில் உள்ள அனைத்து தெருக்களிலும் கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது. மேலும் கிராம எல்லைகளில் உள்ள சாலைகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. தேவையில்லாமல் யாரும் இந்த கிராமத்திற்குள் நுழைய வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதேபோல் அத்தியாவசிய தேவைகளுக்காக கிராமத்திற்குள் நுழைபவர்கள் எல்லைப்பகுதியிலேயே சோப்பு போட்டு கைகளை கழுவி செல்ல சுகாதார துறையினர் ஏற்பாடு செய்து உள்ளனர்.

Next Story