கொரோனா நிவாரண தொகை: ரேஷன் கடையில் ‘டோக்கன்’ வாங்க குவிந்த மக்கள்
கொரோனா வைரஸ் நிவாரண தொகை வழங்குவதற்காக டோக்கன் கொடுக் கப்பட்டது. இதனை பெற ரேஷன் கடைகளில் மக்கள் குவிந்தனர்.
தேனி,
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே பொதுமக்கள் நலன்கருதி கொரோனா நிவாரண தொகையாக அரிசி பெறும் ரேஷன் கார்டுதாரர்களுக்கு ரூ.1,000 மற்றும் நிவாரண பொருட்கள் ரேஷன் கடைகள் மூலம் வினியோகம் செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. அதன்படி இன்று (வியாழக்கிழமை) முதல் நிவாரண தொகை வழங்கப்பட உள்ளது.இந்தநிலையில் நேற்று தேனி மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் தினமும் 100 பேருக்கு வீதம் நிவாரண தொகை மற்றும் நிவாரண பொருட்கள் வழங்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக ரேஷன் கடைகளில் நேற்று டோக்கன் வழங்கப்பட்டது. பெரும்பாலான ரேஷன் கடைகளில் பயனாளிகளின் செல்போன் எண்ணுக்கு ரேஷன் கடை பணியாளர்கள் தொடர்பு கொண்டு, டோக்கன் வாங்கிச் செல்லுமாறு அறிவுறுத்தினர். சில இடங்களில் வீடு தேடிச் சென்று டோக்கன் வினியோகம் செய்தனர். சில இடங்களில் குடியிருப்பு பகுதிகளில் சென்று டோக்கன் பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தினர்.
இருப்பினும், டோக்கன் வாங்குவதற்காக பல இடங்களிலும் மக்கள் ரேஷன் கடைகள் முன்பு குவிந்தனர். தேனி என்.ஆர்.டி. நகரில் உள்ள ஒரு ரேஷன் கடையில் நேற்று காலை டோக்கன் வாங்குவதற்கு மக்கள் குவிந்தனர். அவர்களில் சிலர் வரிசையில் நின்றனர். சிலர், கடைக்கு முன்பு காத்திருந்தனர். கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று அரசு அறிவுறுத்தி உள்ள நிலையில், சில இடங்களில் அதை கடைபிடிக்காமல் மக்கள் கூட்டமாக நின்றனர். இதனால், ரேஷன் கடை பணியாளர்கள் அவர்களை வரிசையில் சமூக இடைவெளிவிட்டு நிற்குமாறு அறிவுறுத்தினர். அதன்பிறகு ஒவ்வொருவருக்கும் டோக்கன் வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story