டெல்லி மாநாட்டுக்கு சென்று திரும்பிய புதுச்சேரியை சேர்ந்த 3 பேருக்கு கொரோனா பாதிப்பு - தனி வார்டில் தீவிர சிகிச்சை
டெல்லி மாநாட்டுக்கு சென்று திரும்பிய புதுச்சேரியை சேர்ந்த 3 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
புதுச்சேரி,
டெல்லியில் நிஜாமுதீன் பகுதியில் நடந்த மாநாட்டில் கலந்து கொண்டு திரும்பியவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து இந்த மாநாட்டில் கலந்து கொண்டவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டன.
புதுச்சேரியிலும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு திரும்பியவர்கள் 6 பேர் அடையாளம் காணப்பட்டனர். இதையடுத்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தனர். இவர்களுக்கு கொரோனா தொற்று உள்ளதா? என்பதை அறிய ரத்த மாதிரி பெறப்பட்டு ஆய்வக பரிசோதனை நடந்தது.
அரியாங்குப்பம் சொர்ணா நகரை சேர்ந்த 3 பேரின் ரத்த மாதிரிகள் ஆய்வின் முடிவில் 37 மற்றும் 51 வயதுடைய 2 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அவர்கள் காய்கறி, இறைச்சி வியாபாரம் செய்து வந்துள்ளனர். இந்தநிலையில் அவர்கள் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு தனி வார்டில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மற்றொருவரும் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
அவர்களுக்கு குறிப்பிட்ட சில டாக்டர்களும், செவிலியர்களும் மட்டுமே தனி வார்டுக்கு சென்று சிகிச்சை அளித்து வருகிறார்கள். வெளியாட்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.
டெல்லி மாநாட்டுக்கு சென்று வந்த திருவண்டார்கோவில் பகுதியை சேர்ந்த 2 பேரும் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் இருந்து வந்தனர். இவர்களது ரத்த மாதிரியை பரிசோதனை செய்ததில் 54 வயது மதிக்கத்தக்க ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்தது. தனியார் ஆஸ்பத்திரி தனிவார்டில் அனுமதிக்கப்பட்டு அவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருடைய உறவினர்கள், அவருடன் நேரடியாக தொடர்பில் இருந்தவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு அவர்களும் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பது குறித்து டாக்டர்கள் கூறும்போது, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனி வார்டில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 24 மணி நேரமும் அவர்களை கண்காணித்து வருகிறோம். சத்தான உணவு வழங்கப்படுகிறது. கொரோனா நோய் பாதிப்பில் இருந்து குணமாவதற்கான அனைத்து சிகிச்சைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று தெரிவித்தனர்.
புதுவை மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 ஆனது. இதனால் பொதுமக்களிடையே பீதி ஏற்பட்டுள்ளது.
Related Tags :
Next Story