டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் தாமாக ஆஸ்பத்திரிக்கு வரவேண்டும் முதல்-அமைச்சர் நாராயணசாமி அறிவுறுத்தல்


டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் தாமாக ஆஸ்பத்திரிக்கு வரவேண்டும் முதல்-அமைச்சர் நாராயணசாமி அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 2 April 2020 8:37 AM GMT (Updated: 2 April 2020 8:37 AM GMT)

டெல்லி மாநாட்டில் பங்கேற்ற புதுச்சேரியை சேர்ந்தவர்கள் தாமாக ஆஸ்பத்திரிக்கு வரவேண்டும் என முதல்-அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி,

புதுவை அரியாங்குப்பம் சொர்ணா நகரை சேர்ந்த 2பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதுதொடர்பாக முதல்-அமைச்சர் நாராயணசாமி கேபினட் அறையில் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார்.

இதில் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், போலீஸ் டி.ஜி.பி. பாலாஜி ஸ்ரீவஸ்தவா, ஐ.ஜி. சுரேந்திர சிங் யாதவ், சுகாதாரத்துறை செயலாளர் பிரசாந்த் குமார் பாண்டா, இயக்குனர் மோகன் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டதையடுத்து எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

டெல்லியில் நடந்த மாநாட்டில் புதுவையை சேர்ந்த 17 பேரும், காரைக்காலை சேர்ந்த 4 பேரும் கலந்து கொண்டதாக தகவல் கிடைத்துள்ளது, புதுவையில் இருந்து சென்றவர்களில் 11 பேர் டெல்லியில் தங்கி விட்டனர். மீதமுள்ள 6 பேரில் அரியாங்குப்பத்தை சேர்ந்த 3 பேரும், திருவண்டார்கோவிலை சேர்ந்த 2 பேரும், காட்டேரிக்குப்பத்தை சேர்ந்த ஒருவரும் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகி உள்ளது. அவர்கள் 6 பேரும் கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

டெல்லியில் இருந்து திரும்பிய அவர்கள் 6 பேரும் யார் யாருடன் பழகினார்கள் என்பது குறித்து வருவாய் மற்றும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்களை தவிர வேறு யாரேனும் டெல்லி கூட்டத்தில் பங்கேற்றிருந்தால் அவர்கள் தாமாக முன்வந்து ஆஸ்பத்திரியில் சேர வேண்டும்.

தற்போது மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த காலை 6 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை மட்டும் கடைகள் திறந்திருக்க நேர கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு பிற்பகல் 2.30 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை பொதுமக்கள் யாரும் தேவை இல்லாமல் வெளியே நடமாடக்கூடாது. மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த தேவைப்பட்டால் துணை ராணுவத்தை அழைப்போம்.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை அளிக்க தேவையான உபகரணங்களை மத்திய அரசிடம் இருந்து பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புதுவை மாநிலத்தில் தற்போது 90 சதவீதம் மக்கள் வீட்டை விட்டு வெளியே வருவதில்லை. இது 100 சதவீதமாக உயர வேண்டும். வருகிற 14-ந் தேதி வரை மக்கள் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும். அரசு துறைகளின் ஒருங்கிணைந்த செயல்பாட்டினால் தற்போது கொரோனா தொற்று கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. மக்கள் தனித்து இருப்பது ஒன்றுதான் இதற்கு மருந்து.

இவ்வாறு முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

Next Story