ஈரோடு மாவட்டத்தில் பொதுமக்களுக்கு ரூ.1000, ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டன
ஈரோடு மாவட்டத்தில் பொதுமக்களுக்கு ரூ.1000, ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டன.
ஈரோடு,
கொரோனா தடுப்பு நடவடிக்கையால் பொதுமக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கியுள்ளனர். இதனால் அவர்கள் வேலைக்கு செல்ல முடியாததால் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அவர்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு ரூ.1000, அரிசி, பாமாயில், கோதுமை உள்ளிட்ட பொருட்கள் ரேஷன் கடைகளில் இலவசமாக வழங்கப்படும் என்று முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
அதன்படி நேற்று ஈரோடு மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் ரூ.1000, இலவசமாக ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டது. கூட்டம் கூடுவதை தவிர்ப்பதற்காக தினமும் 100 பேருக்கு மட்டும் பொருட்கள் வழங்க டோக்கன் கொடுக்கப்பட்டது. கோபி தாலுகாவில் உள்ள 132 ரேஷன் கடைகளில் உள்ள 89 ஆயிரத்து 476 பயனாளிகளுக்கு வழங்கும் நிகழ்ச்சி கோபி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க தலைமை அலுவலகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு, பணத்தையும், ரேஷன் பொருட்களையும் வழங்கி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் கோபி ஆர்.டி.ஓ. ஜெயராமன், தாசில்தார் சிவசங்கர், கூட்டுறவு துணை பதிவாளர் கந்தராஜன், கூட்டுறவு சங்க தலைவர் காளியப்பன், பொது மேலாளர் சோமசுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story