ஈரோட்டில் ரூ.1,000 வாங்குவதற்காக சாலையோரத்தில் அமர்ந்திருந்த மக்கள்


ஈரோட்டில் ரூ.1,000 வாங்குவதற்காக சாலையோரத்தில் அமர்ந்திருந்த மக்கள்
x
தினத்தந்தி 3 April 2020 4:15 AM IST (Updated: 2 April 2020 11:49 PM IST)
t-max-icont-min-icon

ஈரோட்டில் ரேஷன் கடைகளில் ரூ.1,000 வாங்குவதற்காக வந்த பொதுமக்கள் சமூக விலகல் இடைவெளி காரணமாக சாலையோரத்தில் பரிதாபமாக அமர்ந்திருந்தனர்.

ஈரோடு, 

தமிழகத்தில் கொரோனாவால் வருவாய் இழந்து நிற்கும் மக்களுக்கு உதவும் வகையில் தமிழக அரசு ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 மற்றும் இலவச பொருட்கள் வழங்குகிறது. நேற்று முதல் இந்த பொருட்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு ஆங்காங்கே அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் தொடங்கி வைத்தனர். அரசு தரப்பில் இந்த பணம் மற்றும் பொருட்கள் வாங்க பொதுமக்கள் ரேஷன் கடைகளுக்கு வரவேண்டியது இல்லை என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

சமூக விலகலை பொதுமக்கள் பின்பற்றும் வகையில் தினசரி 100 டோக்கன்கள் என்ற அடிப்படையில் அவரவர் வீடுகளுக்கு வந்து பொருட்கள் மற்றும் பணம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் ஈரோடு மாவட்டத்தில் இந்த நடைமுறை கடைபிடிக்கப்படவில்லை. எனவே அனைத்து மக்களும் கடைகளுக்கு வந்து காத்து இருக்கும் நிலை ஏற்பட்டது.

ஈரோடு முத்தம்பாளையம் பகுதியில் ரூ.1,000 மற்றும் பொருட்கள் வாங்க நேற்று ஏராளமான பொதுமக்கள் கூடினார்கள். அவர்கள் சமூக விலகலை பின்பற்ற வசதியாக கடையின் முன்பு ரோட்டோரமாக ஒரு மீட்டர் இடைவெளியில் வட்டங்கள் போடப்பட்டு இருந்தன. நேற்று வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது. எனவே நீண்டநேரம் பொதுமக்களால் வெட்ட வெளியில் வெயிலில் நிற்க முடியவில்லை. எனவே ஒவ்வொருவராக தாங்கள் நின்று கொண்டிருந்த வட்டத்தில் அவர்கள் கொண்டு வந்த பைகளை வைத்துவிட்டு அருகில் உள்ள மதில்சுவரின் நிழலில் காய்ந்த புற்களின் மீது உட்கார்ந்து இருந்தனர். கடைசியில் கட்டங்களில் வெறும் பைகள் மட்டுமே இருந்தன. வெயில் வாட்டும்போது ஒதுங்கக்கூட இடமின்றியும், ஒருவருக்கொருவர் சேர்ந்து பேசக்கூட வழியின்றியும் அவர்கள் உட்கார்ந்து இருந்தது பரிதாபமாக இருந்தது.

இதுபோல் காசிபாளையம் பகுதி ரேஷன் கடையிலும் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. ஆனால், அங்கு நிழல் பகுதியில் கட்டம்போட்டு, பொதுமக்கள் உட்கார இருக்கை வசதி செய்யப்பட்டு இருந்தது. ஆண்கள் ஒரு வரிசையாகவும், பெண்கள் ஒரு வரிசையாகவும் செல்ல அனுமதிக்கப்பட்டனர். காத்திருக்கும் நேரத்திலும் இடைவெளி விட்டு இருக்கைகளில் உட்கார்ந்து இருந்ததால் அவர்கள் சோர்வின்றி காணப்பட்டனர். ஆசிரியர் காலனி உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளிலும் பொதுமக்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

Next Story