ஊரடங்கு உத்தரவால் அறுவடை செய்யாமல் காய்ந்து கிடக்கும் தர்பூசணிகள்
ஊரடங்கு உத்தரவால் நத்தக்காடையூர் பகுதி வயல்களில் அறுவடை செய்யப்படாமல் தர்பூசணி பழங்கள் காய்ந்து கிடக்கின்றன.
முத்தூர்,
திருப்பூர் மாவட்டம் நத்தக்காடையூர் சுற்றுவட்டார கிராமப்பகுதிகளில் ஆண்டு முழுவதும் விவசாயம் சார்ந்த தொழில்கள் மிகவும் பிரதான தொழில்களாக செய்யப்பட்டு வருகிறது. இப்பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரமாக உள்ள ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து ஆண்டுதோறும் இருபிரிவுகளாக நஞ்சை சம்பா நெல் மற்றும் எண்ணெய்வித்து பயிர்கள் சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் பவானிசாகர் அணையில் இருந்து கடந்த ஆண்டு கீழ்பவானி பாசன பகுதிகளில் நஞ்சை சம்பா நெல் சாகுபடிக்கு 6 மாதங்களும் மற்றும் இந்த ஆண்டு எண்ணெய்வித்து பயிர்கள் சாகுபடிக்கு 4 மாதங்களுக்கு முறை தண்ணீரும் திறந்துவிடப்பட்டது. இதனால் நத்தக்காடையூர் சுற்றுவட்டார கிராமப்பகுதிகளில் கிணறுகள், ஆழ்குழாய் கிணறுகள், ஏரிகள், ஓடைகளில் நீர்வரத்து அதிகரித்ததன் காரணமாக பல்வேறு விவசாய சாகுபடி பணிகள் தொய்வின்றி நடைபெற்றன.
இந்த நிலையில் இப்பகுதிகளில் ஒரு சில விவசாயிகள் தங்களது வயல்களில் குறைந்த நீரில் அதிக பலன் அளிக்கும் கோடை வெயிலுக்கு இதமான தர்பூசணி பழங்கள் சாகுபடி செய்துள்ளனர். இந்த தர்பூசணி பழங்கள் கடந்த 15 நாட்களுக்கு முன்பு அறுவடைக்கு தயாராக இருந்தன. இந்த நிலையில் உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்கம் கடந்த 2 வாரகாலமாக இந்தியாவிலும் எதிரொலிக்க தொடங்கியது.
இதனால் கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கையை மத்திய, மாநில அரசுகள் துரிதமாக செயல்படுத்தி வருகின்றன. நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் வாகன போக்குவரத்தும் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தர்பூசணி பழங்கள் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் கூறியதாவது:-
தர்பூசணி பழங்கள் சாகுபடி செய்ய 1 ஏக்கருக்கு வயல் சமன் செய்தல், உழவு கூலி, பார்கட்டுதல், நாற்று நடவு செய்தல், நீர் உர மேலாண்மை, பயிர் பாதுகாப்பு, அறுவடை பணிகள் ஆகியவைகளுக்கு ரூ.75 ஆயிரம் முதல் ரூ.85 ஆயிரம் வரை முதலீடு செய்யப்பட்டு உள்ளது. இந்த தர்பூசணி பழங்கள் அறுவடை செய்த பின்பு கேரள மாநிலம் கொச்சின், மராட்டிய மாநிலம் மும்பை ஆகிய பகுதிகளுக்கு அனுப்பிவைக்கப்படுவது வழக்கம். ஆனால் தற்போது ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதால் வெளிமாநிலங்களுக்கான கனரக வாகன போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டு உள்ளது. இதனால் இப்பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டுள்ள தர்பூசணி பழங்கள் அறுவடை செய்யப்படாமல் வயல்களிலேயே சுட்டெரிக்கும் கோடை வெயிலினால் காய்ந்து கிடக்கின்றன. இதனால் தர்பூசணி பழங்கள் சாகுபடி விவசாயிகளுக்கு இந்த ஆண்டு பெரும் நஷ்டம் ஏற்பட்டு உள்ளது.எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக துரித நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட வேளாண்மை, தோட்டக்கலைத்துறை மூலம் உரிய இழப்பீட்டு தொகை வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தர்பூசணி சாகுபடி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story