மருந்துக்கடைகளில் கிருமிநாசினி கிடைப்பதில்லை திருப்பூரில் மளிகை பொருட்களுக்கு தட்டுப்பாடு - பொதுமக்கள் தவிப்பு


மருந்துக்கடைகளில் கிருமிநாசினி கிடைப்பதில்லை திருப்பூரில் மளிகை பொருட்களுக்கு தட்டுப்பாடு - பொதுமக்கள் தவிப்பு
x
தினத்தந்தி 3 April 2020 4:00 AM IST (Updated: 3 April 2020 2:03 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூரில் மருந்துக்கடைகளில் கிருமிநாசினி கிடைப்பதில்லை. பலசரக்கு கடைகளில் மளிகை பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் தவித்து வருகிறார்கள்.

திருப்பூர், 

கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் பொதுமக்கள் தேவையில்லாமல் சாலையில் நடமாடக்கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை காய்கறி கடைகள், மளிகை கடைகள் போன்ற அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் மட்டும் காலை 6 மணி முதல் மதியம் 2.30 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

திருப்பூரில் ஊரடங்கு உத்தரவு எதிரொலியாக காய்கறி மார்க்கெட்டுகளில் மக்கள் நடமாட்டம் குறைந்துள்ளது. மளிகை கடைகளில் பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. பலசரக்கு மொத்த விற்பனை கடைகளில் மளிகை பொருட்கள் கிடைத்தாலும் ஒவ்வொரு வீதிகளில் உள்ள சில்லறை விற்பனை கடைகளில் மளிகை பொருட்கள் தட்டுப்பாடு ஏற்பட தொடங்கி இருக்கிறது.

காய்கறி மார்க்கெட்டுகள் மற்றும் பலசரக்கு மொத்த விற்பனை கடைகளில் சில்லறை வர்த்தகத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் வியாபாரிகள் மட்டுமே பொருட்களை வாங்கி செல்கிறார்கள். அந்தந்த பகுதிகளில் உள்ள கடைகளில் பொருட்களை விற்பனை செய்து வருகிறார்கள். மளிகை கடைகளில் மக்கள் விரும்பிய பொருட்களை வாங்க முடியவில்லை. சில பொருட்கள் விற்று தீர்ந்து விட்டதாக தெரிவிக்கிறார்கள்.

காய்கறி கடைகளில் தேவையான காய்கறிகள் இருப்பதில்லை. தக்காளி, வெங்காயம், முருங்கைக்காய், கத்தரிக்காய் போன்ற ஒரு சில குறிப்பிட்ட காய்கறிகள் கிடைக்கிறது. பல பகுதிகளில் தினமும் காலை முதல் மதியம் 2.30 மணி வரை ரோட்டோரம் காய்கறி கடைகளை அமைத்துள்ளனர். பல கடைகளில் காய்கறியை கூறு கட்டி விற்கிறார்கள். அதுபோல் மளிகை பொருட்கள், எண்ணெய், மசாலா பொடிகள் குறிப்பிட்ட அளவில் விற்பனை செய்து வருகிறார்கள். பால், தயிர் பாக்கெட்டுகளும் போதுமான அளவில் கிடைப்பதில்லை. சில நேரங்களில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, மளிகை கடைகளில் அனைத்து பொருட்களும் கிடைப்பதில்லை. 10 பொருட்கள் கேட்டால் 2 பொருட்கள் இல்லை என்கிறார்கள். மளிகை பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக கடைக்காரர்கள் கூறுகிறார்கள். மேலும் மளிகை பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது என்றனர்.

இதுகுறித்து திருப்பூரில் உள்ள மளிகை பொருட்கள் மொத்த விற்பனையாளர்கள் கூறும்போது, இன்னும் 1 வாரத்துக்கு மளிகை பொருட்கள் மொத்த விற்பனை கடைகளில் இருப்பு உள்ளது. உளுந்து, பருப்பு, எண்ணெய், அரிசி ஆகியவை முக்கிய தேவையான பொருட்களாகும். இந்த பொருட்கள் தான் அதிக அளவில் விற்பனை நடக்கிறது. சேலத்தில் இருந்து லாரிகள் மூலமாக மளிகை பொருட்கள் நாளை(இன்று) திருப்பூருக்கு கொண்டு வரப்பட உள்ளது. அந்த பொருட்கள் வந்தால் மட்டுமே 14-ந் தேதி வரை தட்டுப்பாடு இல்லாமல் மளிகை பொருட்களை கொடுக்க முடியும். அதுவும் தேவையான மளிகை பொருட்கள் நமக்கு வர வேண்டும்.

சரக்குகளை கொண்டு வருவதற்கு லாரிகளில் அதிக தொகை வசூலிக்கப்படுகிறது. பொருட்களை லாரிகளில் ஏற்றும் கூலித்தொழிலாளர்கள் கூட அதிக கூலி கேட்கிறார்கள். இதன்காரணமாக மளிகை பொருட்களின் விலையை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இன்று(நேற்று) வரை மளிகை பொருட்களை வழக்கமான விலையில் தான் விற்பனை செய்து வருகிறோம். விரைவில் தற்போதைய விலையில் இருந்து 15 முதல் 20 சதவீதம் மளிகை பொருட்களின் விலை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என்றனர்.

திருப்பூரில் உள்ள மருந்துக்கடைகளில் முக கவசம், கிருமிநாசினி கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான கடைகளில் முக கவசம், கிருமிநாசினி இருப்பு இல்லை என்று அறிவிப்பு பலகை வைத்துள்ளனர். குறிப்பிட்ட மருந்துக்கடைகளில் மருந்துகள் கிடைப்பதால் அந்த கடைகளுக்கு முன்பு மக்கள் அதிக அளவில் தினமும் வரிசையில் காத்திருந்து மருந்து பொருட்களை வாங்கி செல்கிறார்கள். பல பகுதிகளில் மருந்துக்கடைகள் மூடப்பட்டுள்ளன. தற்போதைய நிலையில் முகக்கவசம், கிருமிநாசினி முக்கிய தேவை என்றாலும் கூட அதற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர். பல பகுதிகளில் பனியன் துணியால் ஆன முக கவசத்தை வாங்கி பொதுமக்கள் பயன்படுத்தி வருகிறார்கள்.

பொதுவாக காய்கறி, சமையல் பொருட்கள் திடீரென்று தீர்ந்து விட்டால் பக்கத்து வீட்டு கதவை பெண்கள் தட்டுவது வழக்கம். ஆனால் தற்போதைய சூழ்நிலையில் அதுவும் சாத்தியமில்லாமல் போய் விட்டது. தொற்று நோய் ஏற்படும் என பயந்து அனைவரும் வீடுகளுக்குள் இருக்கிறார்கள். மளிகை பொருட்கள் தட்டுப்பாடு காரணமாக பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.

Next Story