டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் உள்பட கர்நாடத்தில் மேலும் 14 பேருக்கு கொரோனா - பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 121 ஆக உயர்வு
டெல்லி மாநாட்டில் பங்கேற்ற 11 பேர் உள்பட கர்நாடகத்தில் மேலும் 14 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 121 ஆக உயர்ந்துள்ளது.
பெங்களூரு,
கர்நாடக அரசின் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. நேற்று முன்தினம் வரை மாநிலத்தில் 107 பேர் அந்த வைரசுக்கு பாதிக்கப்பட்டிருந்தனர். 3 பேர் மரணம் அடைந்து உள்ளனர். இதுவரை 11 பேர் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பியுள்ளனர். இந்த நிலையில் நேற்று புதிதாக மேலும் 14 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது பரிசோதனையில் உறுதியாகியுள்ளது. இதன் மூலம் கர்நாடகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 121 ஆக உயர்ந்துள்ளது.
கர்நாடகத்தில் நேற்று கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட 14 பேரின் விவரம் பின்வருமாறு:-
மைசூரு மாவட்டத்தை சேர்ந்த 24 வயது, 22 வயது இளைஞர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது அவர்கள் ஏற்கனவே கொரோனா பாதித்த நபருடன் தொடர்பில் இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பல்லாரியை சேர்ந்த 14 வயது சிறுவனை கொரோனா தாக்கியுள்ளது. அந்த சிறுவன் அங்குள்ள ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளான்.
பீதர் மாவட்டத்தில் 48 வயது, 30 வயது, 41 வயது, 66 வயது, 59 வயது, 39 வயது, 60 வயது, 63 வயது, 73 வயது, 45 வயது, 60 வயது நபர்கள் என 11 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது மருத்துவ பரிசோதனையில் உறுதியாகியுள்ளது. அவர்கள் அனைவரும் பீதரில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் 39 வயது நபரின் சொந்த ஊர் ஐதராபாத் ஆகும்.
பெங்களூருவில் 50 பேர், மைசூருவில் 21 பேர், தட்சிண கன்னடாவில் 9 பேர், உத்தர கன்னடாவில் 8 பேர், சிக்பள்ளாப்பூரில் 7 பேர், கலபுரகியில் 4 பேர், பல்லாரியில் 4 பேர், தாவணகெரே, உடுப்பியில் தலா 3 பேர், தார்வார், குடகுவில் கொரோனா வைரசால் தலா ஒருவர், பீதரில் 10 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் பெங்களூருவில் மட்டும் 9 பேர் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் பெங்களூரு, துமகூரு, கலபுரகியில் தலா ஒருவர் உயிரிழந்துள்ளனர்.
புதிதாக கொரோனா பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்த அனைவரையும் கண்டுபிடித்து தனிமைப்படுத்தி இருக்கிறோம். கொரோனா அறிகுறியுடன் நேற்று 64 பேர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர். மொத்தம் 424 பேர் ஆஸ்பத்திரியில் தனி வார்டில் கண்காணிப்பில் வைக்கப்பட்டு உள்ளனர். வீட்டு தனிமை கால விதிமுறையை மீறிய 52 பேரை முகாமிற்கு மாற்றியுள்ளோம். இந்த தனிமை முகாமில் மொத்தம் 293 பேர் உள்ளனர். டெல்லி நிஜாமுதீன் மாநாட்டில் பங்கேற்றவர்கள் தாமாக முன்வந்து, 080-29711171 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள்
புதிதாக கொரோனா பாதித்த 14 பேரில் 11 பேர் டெல்லி நிஜாமுதீன் மாநாட்டில் கலந்துகொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story