ஏழை எளியோர், வெளி மாநிலத்தவருக்கு உணவு


ஏழை எளியோர், வெளி மாநிலத்தவருக்கு உணவு
x
தினத்தந்தி 2 April 2020 10:30 PM GMT (Updated: 3 April 2020 12:16 AM GMT)

தடை உத்தரவினால் வேலை இழந்து தவிக்கும் ஏழை, எளியவர்கள், பிழைப்பு தேடி வந்து தவிக்கும் வெளி மாநிலத்தவர் மற்றும் ஆதரவற்றோருக்கு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கப்பட்டு வருகிறது.

தளவாய்புரம், 

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமல் படுத்தப்பட்டதால் ஆதரவற்றோர், ஏழை, எளியோர் மற்றும் பிற இடங்களில் இருந்து வந்தோர் உணவின்றி தவிக்கும் நிலை உள்ளது. அவர்களுக்கு பலரும் ஆதரவு கரம் நீட்டி வருகின்றனர்.

இதன் அடிப்படையில், செட்டியார்பட்டியில் வட மாநில இளைஞர்கள் 4 பேர் வேலையின்றி உணவுக்கு கஷ்டப்படுவதை அறிந்து கலெக்டர் உத்தரவுப்படி செட்டியார்பட்டி செயல் அலுவலர் அழகர் அரிசி மற்றும் மளிகை சாமான்கள் வழங்கினார். அப்போது ராஜபாளையம் தாசில்தார் ஆனந்தராஜ், துணை தாசில்தார் விஜிமாரி ஆகியோர் உடனிருந்தனர்.

ராஜபாளையம் நகராட்சி 16-வது வார்டு பகுதியில் வசிக்கும் விவசாய தினக்கூலி தொழிலாளர்களுக்கு 6.56 பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் சார்பில் தலைவர் வனராஜ் உணவு பொட்டலங்களை வழங்கினார். இந்த பகுதியில் உள்ள தூய்மை பணியாளர்கள், விவசாய தினக்கூலி பணியாளர்கள் 3000-க்கும் மேற்பட்டவர்களுக்கு உணவு பொட்டலங்களை வழங்கி இருப்பதாக அவர் தெரிவித்தார். அப்போது துணைத்தலைவர் கந்தகிருஷ்ணகுமார், மேலாளர் முருகேசன் ஆகியோர் உடன் இருந்தனர்.

ஏழைகளுக்கு விருதுநகரில் மக்கள் நீதி மய்யம் சார்பாக அரிசி, காய்கறிகள், பலசரக்கு சாமான்கள் வழங்கப்பட்டன. விருதுநகர் மத்திய மாவட்ட செயலாளர் காளிதாஸ், மாவட்ட இளைஞரணி செயலாளர் பிச்சைமணி ஆகியோர் இதனை வழங்கினார்கள். நிகழ்ச்சியில் நகர செயலாளர் கமல் கண்ணன், ஒன்றிய செயலாளர் நாகேந்திரன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் நெல்சன், வெல்டிங் விஜி, பாலமுருகன், முத்துக்கமல், பன்னீர், பட்டுக்கனி, பாண்டி, காளிராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர். 50 குடும்பங்களுக்கு ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள உதவிகள் வழங்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

ஊரடங்கை தொடர்ந்து ஆதரவற்றவர்களுக்கு உணவு வழங்க பா.ஜனதா கட்சி மேலிடம் தங்கள் கட்சியினரை கேட்டுக்கொண்டுள்ளது.

அதன் அடிப்படையில் ஆலங்குளம் அருகேயுள்ள நல்லக்கம்மாள்புரத்தில் உள்ள ஆதரவற்ற முதியோர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. மாவட்ட துணை தலைவர் முருகேஸ்வரி, செயலாளர் ராஜா, ஒன்றிய செயலாளர் தேன்கனி, வக்கீல் போத்திராஜ், பச்சையப்பன் குருசாமி ஆகியோர் இதனை வழங்கினர். இதேபோல சிவகாசி நகர பா.ஜனதா சார்பில் ஏழைகளுக்கு அரிசி மற்றும் மளிகை சாமான்கள் வழங்கப்பட்டன. இதில் கட்சியின் ஓ.பி.சி. அணி மாவட்ட தலைவர் பாட்டக்குளம் பழனிசாமி, நகர தலைவர் ரகுநாதன், நகர செயலாளர் பரமசிவம், ராமர், மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மூலம் கிராமப்புறபகுதிகளில் ஆதரவற்று திரிவோருக்கு உணவு தயாரிக்கப்பட்டு வழங்கப்படுகிறது. ஏற்பாடுகளை ஆணையாளர் காமேஸ்வரி செய்துள்ளார். சுகாதாரமான முறையில் உணவு தயாரித்து வழங்க அவர் கேட்டுக்கொண்டார்.

ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர் முருகன் அறிவுறுத்தலின் படி ராஜபாளையம் நகர ரஜினி மக்கள் மன்ற செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமையில் 65 குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு, எண்ணெய் மற்றும் முக கவசமும் வழங்கப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வழக்கறிஞர் அணி ஜான், நகர இணைச்செயலாளர் சக்திவேல், துணைச்செயலாளர்கள் ரஜினி குட்டி, ரவி மற்றும் குமார், சிவசங்கரகுரு, பெருமாள், கோபி, சந்திரசேகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Next Story