3 பார்களின் கதவை உடைத்து போலீசார் சோதனை: ரூ.2½ லட்சம் மது பாட்டில்கள் பறிமுதல் - பார் உரிமையாளர் கைது


3 பார்களின் கதவை உடைத்து போலீசார் சோதனை: ரூ.2½ லட்சம் மது பாட்டில்கள் பறிமுதல் - பார் உரிமையாளர் கைது
x
தினத்தந்தி 2 April 2020 10:00 PM GMT (Updated: 3 April 2020 4:15 AM GMT)

3 பார்களின் கதவை உடைத்து போலீசார் சோதனை நடத்தியதில் ரூ.2½ லட்சம் மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக பார் உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.

தஞ்சாவூர்,

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் விற்கும் கடைகளை தவிர பிற கடைகள் அடைக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக் கடைகள், பார்களும் அடைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் தஞ்சை மாநகரில் பல இடங்களில் 3 மடங்கு கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்யப்படுவதாக மேற்கு போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது.

அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் செங்குட்டுவன் மற்றும் போலீசார் தஞ்சை ரெயிலடியில் உள்ள டாஸ்மாக் பாருக்கு சென்றனர். அங்கு பார் பூட்டப்பட்டு இருந்தது. உடனே போலீசார், பார் கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு அட்டை பெட்டிகள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன. அந்த அட்டை பெட்டிகளை திறந்து பார்த்தபோது அவற்றில் மது பாட்டில்கள் இருந்தன. இந்த மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மொத்தம் 180 மி.லிட்டர் அளவு கொண்ட 930 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் மதிப்பு ரூ.1 லட்சத்து 6 ஆயிரத்து 950 ஆகும். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து லட்சுமணன் என்பவரை தேடி வருகின்றனர்.

தஞ்சை வடக்குவீதியில் உள்ள டாஸ்மாக் பாருக்கு மதுவிலக்குப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயசீலன், இன்ஸ்பெக்டர் ஹேமாவதி, ஏட்டுகள் ரமேஷ், சாந்தகுமார், பாபு ஆகியோர் சென்றனர். அங்கு பூட்டப்பட்டு இருந்த பார் கதவின் பூட்டை உடைத்து போலீசார் உள்ளே சென்றனர். அங்கு அட்டை பெட்டிகளில் மது பாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 180 மி.லிட்டர் மற்றும் 360 மி.லிட்டர் அளவு கொண்ட மது பாட்டில்கள், பீர் பாட்டில்கள் என மொத்தம் 807 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் மதிப்பு ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் ஆகும். இது தொடர்பாக பார் உரிமையாளர் மனோகர், டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர் ரமேஷ், விற்பனையாளர் வேலு ஆகிய 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தஞ்சை தற்காலிக பஸ் நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் பாரின் கதவின் பூட்டை உடைத்து மதுவிலக்குப்பிரிவு போலீசார் உள்ளே சென்றபோது அங்கு மது பாட்டில்கள் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. 180 மி.லிட்டர் அளவு கொண்ட 336 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு ரூ.38 ஆயிரம் ஆகும். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பார் உரிமையாளரான தஞ்சை பாலோப்பநந்தவனம் பொன்னிநகரை சேர்ந்த பாலாஜியை கைது செய்தனர். மேலும் டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர் ராமலிங்கம், விற்பனையாளர்கள் சுதாகர், தனவேல், பார் தொழிலாளி முத்து ஆகியோரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story