ரேஷன் கடைகளில் கொரோனா நிவாரணம் ரூ.1,000 வினியோகம் - பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து வாங்கி சென்றனர்


ரேஷன் கடைகளில் கொரோனா நிவாரணம் ரூ.1,000 வினியோகம் - பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து வாங்கி சென்றனர்
x
தினத்தந்தி 2 April 2020 10:00 PM GMT (Updated: 3 April 2020 4:15 AM GMT)

ரேஷன் கடைகளில் கொரோனா நிவாரணம் ரூ.1000 வினியோகிக்கப்பட்டது. இதனை பொதுமக்கள் சமூக இடை வெளியை கடைபிடித்து வாங்கி சென்றனர்.

கரூர்,

கொரோனா நிவாரணமாக ரூ.1,000 வழங்கப்படும் என அரசு அறிவித்தது. அதன்படி கரூர் மாவட்டத்தில் உள்ள 588 ரேஷன்கடைகளுக்கு உட்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கும் டோக்கன் வினியோகிக்கும் பணி நடைபெற்று வருகிறது. அந்த டோக்கனில் நிவாரணத்தொகை-அத்தியாவசிய பொருட்கள் பெற ரேஷன் கடைக்கு வர வேண்டிய நாள், நேரம் உள்ளிட்ட விவரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

நேற்று கரூர் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவுத்துறை ரேஷன் கடைகளில் காலை 10 மணி முதலே கொரோனா நிவாரணம் மற்றும் அரிசி, பருப்பு, சர்க்கரை, பாமாயில் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வினியோகிக்கப்பட்டன. தாந்தோணிமலை வெங்கடரமணசாமி கோவில் அருகே, கரூர். வ.உ.சி. தெரு, செங்குந்தபுரம் மற்றும் பசுபதிபாளையம், வாங்கல், நெரூர், சோமூர், வெள்ளியணை, அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம், குளித்தலை உள்பட மாவட்டத்தின் பல்வேறு ரேஷன் கடைகளிலும் அங்கு வரையப்பட்டிருந்த வட்டத்துக்குள் நின்று சமூக இடைவெளியை கடைபிடித்து பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர்.

இது குறித்து கரூர் மாவட்ட வழங்கல் அதிகாரி மல்லிகா கூறியதாவது:-

இன்று (அதாவது நேற்று) 354 கடைகளில் ரூ.1,000 நிவாரணத்துடன் பொருட்கள் வினியோகம் நடந்தது. சுழற்சி முறையில் வருகிற 15-ந்தேதி வரை அனைத்து கடைகளிலும் நிவாரணத்துடன் பொருட்கள் வழங்கப்படும். ஒரு நாளைக்கு காலையில் 50 குடும்ப அட்டைதாரர்களுக்கும், பிற்பகலில் 50 குடும்ப அட்டைதாரர்களுக்கும் என காலை 10-12, மதியம் 12-2, மதியம் 2-4, மாலை 4-6 மணி என்கிற நேரத்தில் நிவாரணத்தொகை வழங்கப்படுவதால் டோக்கனில் குறிப்பிடப்பட்ட நேரத்திற்கு ரேஷன் கடைக்கு வந்தால் போதுமானது.

குடும்ப அட்டைதாரர்கள் தங்களுக்கு டோக்கனில் குறிப்பிடப்பட்ட நாள், நேரத்தில் நிவாரணத்தொகை, பொருட்களை பெற முடியவில்லையெனில் விடுபட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு என ஒதுக்கீடு செய்யப்பட்ட நாளில் அதனை பெற்றுக் கொள்ளலாம். சணப்பிரட்டி உள்ளிட்ட உணவு சேமிப்பு கிடங்குகளில் அத்தியாவசிய பொருட்கள் போதுமான அளவில் இருப்பு உள்ளது. எனவே உணவு பொருள் வழங்கலில் பற்றாக்குறை ஏதும் ஏற்பட வாய்ப்பு இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

இதேபோல் குளித்தலை தெற்குமடவாளத் தெரு, தண்ணீர்பந்தல் மற்றும் கிராம பகுதியில் உள்ள ரேஷன்கடைகளில் கொரோனா நிவாரணத்தொகை வழங்கப்பட்டது. இதேபோல் கடவூர் ஒன்றியத்தில் உள்ள பாலவிடுதி, விராலிபட்டி, சுண்டுகுழிபட்டி, உடையாபட்டி, காணியாளம்படி, மாமரத்துப்படி, கொசூர் ஆகிய கூட்டுறவு சங்கத்திற்கு உட்பட்ட ரேஷன் கடைகளில் நிவாரணத்தொகை வழங்கப்பட்டது. இதேபோல் வேட்மங்கலம் ஊராட்சி கவுண்டன்புதூர் ரேஷன் கடை உள்ளிட்ட சுற்றுப்பகுதியில் உள்ள ரேஷன் கடைகளிலும் நிவாரணத்தொகை வழங்கப்பட்டது. 

Next Story