தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் நடமாடும் வாகனங்கள் மூலம் ரேஷன் பொருட்கள் வினியோகம் - கலெக்டர் ஆய்வு


தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் நடமாடும் வாகனங்கள் மூலம் ரேஷன் பொருட்கள் வினியோகம் - கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 3 April 2020 4:45 AM GMT (Updated: 3 April 2020 5:28 AM GMT)

தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் நடமாடும் வாகனங்கள் மூலம் ரேஷன் பொருட்கள் வினியோகிக்கப்பட்டது. இதை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா ஆய்வு செய்தார்.

ஊட்டி,

டெல்லி சென்று நீலகிரி திரும்பிய 8 பேர் ஊட்டி அரசு தலைமை மருத்துவமனை தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதற்கிடையே நேற்று முன்தினம் ஊட்டி காந்தலில் 2 பேர் வசித்து வந்த வீடுகளை சுற்றி 3 கிலோ மீட்டர் தூரம் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது. அதேபோல் குன்னூரில் ராஜாஜி நகர், கோத்தகிரியில் பழைய காவல் நிலைய பகுதி தனிமைப்படுத்தப்பட்டு உள்ளது. கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க பொதுமக்கள் வீட்டில் இருந்து வெளியே வரக்கூடாது என்று கலெக்டர் உத்தரவிட்டு உள்ளார்.

பொதுமக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை சிரமம் இன்றி வாங்கிக்கொள்ள காந்தல் பகுதியில் 7 குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது. ஒவ்வொரு குழுவிலும் தலா 4 பேர் உள்ளனர். அவர்களது செல்போன் எண்கள் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் நேற்று காலை முதல் பொதுமக்கள் பால், காய்கறிகள், மளிகை பொருட்கள் போன்றவற்றின் பட்டியல்களை குழுவினரிடம் தொடர்பு கொண்டு கொடுத்தனர். குழுவினர் கடைகளுக்கு சென்று மேற்கண்ட பொருட்களை வாங்கி வந்து வீடு, வீடாக கொண்டு சென்று வழங்கினர்.

தனிமைப்படுத்தப்பட்ட காரணத்தால் காந்தலில் 3 ரேஷன் கடைகள் அடைக்கப்பட்டன. இதையடுத்து அப்பகுதி ரேஷன் கார்டுதாரர்களுக்கு நடமாடும் வாகனங்கள் மூலம் நிவாரண தொகை ரூ.1000 மற்றும் அத்தியாவசிய பொருட்களான அரிசி, சர்க்கரை, சமையல் எண்ணெய், பருப்பு, கோதுமை வழங்கப்பட்டது. பாதுகாப்பு கவச உடை அணிந்த ஊழியர்கள் மக்களிடம் இருந்து ஸ்மார்ட் கார்டை பெற்று பதிவு செய்து நிவாரண தொகையை வழங்கினர். நடமாடும் மருத்துவ வாகனத்தில் மருந்து, மாத்திரைகளை வாங்க மக்கள் வரிசையில் நின்றனர்.

அப்போது கலெக்டர் இன்னசென்ட் திவ்யா காந்தல் பகுதியில் நிவாரண தொகை மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படுகிறதா, பொதுமக்கள் சமூக இடைவெளி விட்டு வரிசையில் நின்று வாங்கி செல்கிறார்களா என்று ஆய்வு செய்தார். பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் உடனுக்குடன் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார். பின்னர் அவர் ரேஷன் கார்டுதாரர்களுக்கு நிவாரண தொகை மற்றும் அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்.

தனிமைப்படுத்தப்பட்ட 3 இடங்களில் 12 ரேஷன் கடைகள் உள்ளது. இந்த கடைகளில் இணைக்கப்பட்டு உள்ள 11 ஆயிரம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு நடமாடும் வாகனங்கள் மூலம் பொருட்கள் வினியோகிக்கப்பட்டு வருகிறது. காந்தலில் தேவை இல்லாமல் வீட்டை விட்டு வெளியே வந்தவர்களை போலீசார் விரட்டினர். அங்கு சில போலீசார் பாதுகாப்பு கவச உடை அணிந்து இருந்தனர். 

Next Story