பள்ளிபாளையம் அருகே, குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 கொரோனா நிவாரண உதவி - அமைச்சர் தங்கமணி வழங்கி தொடங்கி வைத்தார்


பள்ளிபாளையம் அருகே, குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 கொரோனா நிவாரண உதவி - அமைச்சர் தங்கமணி வழங்கி தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 3 April 2020 1:14 PM IST (Updated: 3 April 2020 1:14 PM IST)
t-max-icont-min-icon

பள்ளிபாளையம் அருகே குடும்பஅட்டைதாரர்களுக்கு கொரோனா வைரஸ் நிவாரண உதவியை அமைச்சர் தங்கமணி வழங்கி தொடங்கி வைத்தார்.

பள்ளிபாளையம்,

கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக நாடு முழுவதும் வருகிற 14-ந் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமலில் இருந்து வருகிறது. எனவே பொதுமக்கள் நலன்கருதி தமிழக அரசு குடும்பஅட்டைதாரர்களுக்கு கொரோனா வைரஸ் நிவாரண உதவியாக ரூ.1,000 மற்றும் ஏப்ரல் மாதத்திற்கான அரிசி, சர்க்கரை, பருப்பு, சமையல் எண்ணெய், கோதுமை ஆகிய பொருட்கள் 2-ந்தேதி (நேற்று) முதல் விலையின்றி வழங்கப்படும் என்று அறிவித்தது.

அதன்படி நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே வெடியரசம்பாளையத்தில் உள்ள ரேஷன் கடையில் தமிழக மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி நிவாரண உதவி மற்றும் பொருட்களை குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கி தொடங்கி வைத்தார். முன்னதாக ரேஷன் கடையில் குடும்ப அட்டைதாரர்கள் கைகழுவுவதற்கு ஏதுவாக சோப்பு வைக்கப்பட்டிருந்தது. அனைவரும் சோப்பு போட்டு கை கழுவிய பின்னரே கொரோனா நிவாரண உதவி மற்றும் உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டது. நிவாரண உதவி பெற வந்தவர்கள் 1 மீட்டர் சமூக இடைவெளி விட்டு நின்று வாங்கி சென்றனர்.

மேலும் குடும்ப அட்டைதாரர்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களையும் அமைச்சர் தங்கமணி வழங்கினார். அப்போது அ.தி.மு.க. நிர்வாகிகள், அரசு அதிகாரிகள் ஆகியோர் உடன் இருந்தனர். இதேபோல ஒட்டமெத்தை, கரட்டாங்காடு, ஆவத்திபாளையம் ஆகிய பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளிலும் நிவாரணத்தொகை வழங்கப்பட்டது.

இதில் பள்ளிபாளையம் நகர்மன்ற முன்னாள் தலைவர் வெள்ளிங்கிரி, மாவட்ட கவுன்சிலர் செந்தில், அக்ரஹாரம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் மாதேஸ்வரன் மற்றும் வருவாய்த்துறையினர் கலந்து கொண்டனர். மேலும் திருச்செங்கோடு துணை போலீஸ் சூப்பிரண்டு சண்முகம் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Next Story