தென்காசி உழவர் சந்தையில் காய்கறிகள் விற்பனை - கலெக்டர் தொடங்கி வைத்தார்
தென்காசி உழவர் சந்தையில் காய்கறிகள் விற்பனையை கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் தொடங்கி வைத்தார்.
தென்காசி,
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தற்போது ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. ஆனால் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு அனுமதி உள்ளது. தென்காசியில் பழைய பஸ் நிலையம் மற்றும் புதிய பஸ்நிலையங்களில் காய்கறிகள் விற்பனை செய்யப்படுகின்றன.
இந்த நிலையில் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள உழவர் சந்தை நீண்ட நாட்களாக இயங்காமல் இருந்தது. நேற்று அங்கு காய்கறிகள் விற்பனை தொடங்கியது. இதனை மாவட்ட கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் தொடங்கி வைத்தார். இந்த உழவர் சந்தையில் விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் பொருட்களை விற்பனை செய்யலாம். நேற்று ரூ.100 மற்றும் ரூ.85-க்கு காய்கறிகள் தொகுப்பு விற்பனை செய்யப்பட்டது. நிகழ்ச்சியில், மாவட்ட வேளாண்மை இயக்குனர் முருகானந்தம் மற்றும் தோட்டக்கலை துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
தென்காசியில் கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் தலைமையில் அனைத்து மத தலைவர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுகுணா சிங், மாவட்ட வருவாய் அலுவலர் கல்பனா, தென்காசி உதவி கலெக்டர் பழனிகுமார், உதவி மருத்துவ அலுவலர் ராஜ்குமார் மற்றும் அனைத்து மத தலைவர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கலெக்டர் மற்றும் அதிகாரிகள் கூறுகையில், ‘தற்போது கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. எனவே பொதுமக்கள் வீட்டை விட்டு கண்டிப்பாக வெளியே வரக்கூடாது. அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு வீட்டில் இருந்து யாராவது ஒருவர் மட்டும் வெளியே வந்து வாங்கி செல்ல வேண்டும். கோவில்கள், மசூதிகள், கிறிஸ்தவ ஆலயங்களில் கூட்டு பிரார்த்தனை நடத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது.
அதனை அனைவரும் பின்பற்ற வேண்டும். கொரோனா தொற்று யாருக்காவது ஏற்பட்டால், அது அவரை சுற்றியுள்ள அனைவரையும் பாதிக்கும். எனவே அனைவரும் அடிக்கடி கைகழுவ வேண்டும். தாங்கள் இருக்கும் இடத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். இதுதொடர்பாக அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்’ என்றார்.
Related Tags :
Next Story