நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் மேலும் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - மொத்தம் 36 பேருக்கு தனி வார்டில் சிகிச்சை
நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் மேலும் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. கொரோனா பாதித்த மொத்தம் 36 பேருக்கு தனி வார்டில் கிசிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நெல்லை,
நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா சிறப்பு வார்டு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த வார்டில் கொரோனா அறிகுறியுடன் வரும் நோயாளிகளின் ரத்த மாதிரி எடுக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்படுகிறது. இதில் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டால், தனிமை வார்டில் வைத்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. மற்றவர்கள் சாதாரண வார்டுக்கு மாற்றம் செய்யப்பட்டு வருகிறார்கள்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ராதாபுரம் அருகே உள்ள சமூகரெங்கபுரத்தை சேர்ந்த 43 மதிக்கத்தக்க ஒருவர் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். ரத்த பரிசோதனை முடிவில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இந்த நிலையில் டெல்லி நிஜாமுதீனில் நடந்த மாநாட்டில் கலந்து கொண்டவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இந்த மாநாட்டில் நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர். அவர்களை மருத்துவ குழுவினர் பட்டியலிட்டு ரத்த பரிசோதனை செய்தனர்.
அதில், நெல்லை மேலப்பாளையம் பகுதியை சேர்ந்த 16 பேருக்கும், பேட்டையை சேர்ந்த ஒருவருக்கும், வள்ளியூர் பகுதியை சேர்ந்த ஒருவருக்கும், களக்காட்டை சேர்ந்த 3 பேருக்கும், தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூரை சேர்ந்த ஒருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. ஒரே நாளில் 22 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருந்தது கடந்த 31-ந் தேதி உறுதி செய்யப்பட்டது.
இதற்கிடையே, கடந்த 1-ந் தேதி மேலும் 6 பேருக்கு கொரோனா தொற்று இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதில், 4 பேர் பேட்டையை சேர்ந்தவர்கள், 2 பேர் களக்காடு பகுதியை சேர்ந்தவர்கள். நேற்று முன்தினம் தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
அதன்படி, நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் மொத்தம் 30 கொரோனா நேயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுக்கு தனிமை வார்டில் வைத்து, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் படுக்கை எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் கொரோனா வார்டில் சிகிச்சைக்கு சேர்ந்தவர்களின் ரத்தம் மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது. அதில் நேற்று மேலும் 6 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதுவரை நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் மொத்தம் 36 கொரோனா நோயாளிகளுக்கு தனிமை வார்டில் வைத்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களுக்கு கவசம் அணிந்த டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். கொரோனா பாதிப்புடன் இங்கு 36 பேர் சிகிச்சை பெற்று வருவது நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story