உடுமலை வனப்பகுதியில் காட்டுத்தீ; வனத்துறையினர் போராடி அணைத்தனர்


உடுமலை வனப்பகுதியில் காட்டுத்தீ; வனத்துறையினர் போராடி அணைத்தனர்
x
தினத்தந்தி 4 April 2020 3:45 AM IST (Updated: 4 April 2020 12:56 AM IST)
t-max-icont-min-icon

உடுமலை வனப்பகுதியில் பற்றி எரிந்த காட்டுத்தீயை வனத்துறையினர் போராடி அணைத்தனர்.

தளி, 

உடுமலையை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகங்கள் உள்ளன. வனப்பகுதியை ஆதாரமாகக்கொண்டு யானை, புலி, சிறுத்தை, கடமான், காட்டெருமை, உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றன. அதுதவிர பொறுப்பாறு, கோடந்தூர், ஆட்டுமலை, ஈசல்தட்டு, கரட்டுபதி, தளிஞ்சி, மாவடப்பு, குழிப்பட்டி, குருமலை, மஞ்சம்பட்டி, உள்ளிட்ட மலைவாழ் குடியிருப்புகளில் ஏராளமான மலைவாழ் மக்கள் குடியிருந்து வருகின்றார்கள்.

மேலும் வனப்பகுதியில் ஈட்டி, சந்தனம், வெள்வேல், புங்கன் வேம்பு வாகை உள்ளிட்ட மரங்கள் வளர்ந்து உள்ளன. வனப்பகுதியின் பசுமைக்கும் வனவிலங்குகளின் உணவு மற்றும் தண்ணீர் தேவைக்கு மழைப்பொழிவு அவசியமான ஒன்றாக உள்ளது. கடந்தாண்டு தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை நல்லமுறையில் பெய்தது. இதனால் வனப்பகுதி பசுமைக்கு திரும்பியதுடன் வனவிலங்குகளுக்கு உணவு மற்றும் தண்ணீர் தாராளமாக கிடைத்து வந்தது.

ஆனால் கடந்த சில நாட்களாக மேற்குதொடர்ச்சிமலை பகுதிகளில் கடும் வறட்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக ஆறுகள் மற்றும் ஓடைகள் நீர்வரத்தை இழந்து தவித்து வருகின்றன. இதனால் கோடை காலத்திற்கு முன்பாகவே புற்கள் மற்றும் செடிகள் முற்றிலுமாக காய்ந்துவிட்டன. அத்துடன் எளிதில் காட்டுத்தீ பற்றுவதற்கான சூழல் நிலவி வந்தது. இதையடுத்து உடுமலை மற்றும் அமராவதி வனத்துறையினர் வனப்பகுதியில் தீத்தடுப்பு கோடுகள் அமைத்தனர்.

அதுமட்டுமின்றி வனத்துறையினர் தீவிர ரோந்து பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சூழலில் உடுமலை வனப்பகுதி கொக்கனான்மலை பகுதியில் திடீரென காட்டுத்தீ பற்றிக்கொண்டது. இதுகுறித்த தகவலை மலைவாழ்மக்கள் உடுமலை வனத்துறைக்கு தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து வனச்சரக அலுவலர் தனபாலன் தீயை அணைக்குமாறு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த வனத்துறையினருக்கு உத்தரவிட்டார்.

இதையடுத்து கொக்கனான்மலை பகுதிக்கு விரைந்த வனத்துறையினர் அங்கு பற்றி எரிந்து கொண்டிருந்த தீயை போராடி அணைத்த னர். வனத்துறையினரின் துரித நடவடிக்கையால் காட்டுத்தீ உடனடியாக கட்டுப்படுத்தப்பட்டது. மேலும் உடுமலை வனத்துறையினர் காட்டுத்தீ ஏற்பட்ட பகுதியில் சமையல் செய்து சாப்பிட்டுக்கொண்டு தொடர்ந்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Next Story