எண்ணூரை சேர்ந்த அண்ணன்-தம்பிக்கு கொரோனா அறிகுறி


எண்ணூரை சேர்ந்த அண்ணன்-தம்பிக்கு கொரோனா அறிகுறி
x
தினத்தந்தி 3 April 2020 10:30 PM GMT (Updated: 3 April 2020 7:58 PM GMT)

டெல்லி நிகழ்ச்சியில் பங்கேற்ற எண்ணூரைச் சேர்ந்த அண்ணன்-தம்பிக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பது தெரிந்தது. இருவரும் ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

திருவொற்றியூர், 

டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற தமிழகத்தைச் சேர்ந்த பலருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். மற்றவர்களை அடையாளம் காணும் பணியும் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் எண்ணூர் பகுதியில் மளிகை கடை நடத்தி வரும் அண்ணன்-தம்பி ஆகிய இருவர் டெல்லி நிகழ்ச்சியில் பங்கேற்றதாக அடையாளம் காணப்பட்டது. இதையடுத்து மாதவரம் போலீஸ் துணை கமிஷனர் ரவாளிப்பிரியா, சுகாதாரத்துறை மற்றும் சென்னை மாநகராட்சி திருவொற்றியூர் மண்டல உதவி கமிஷனர் பால் தங்கதுரை உள்ளிட்ட அதிகாரிகள் அவர்களின் வீட்டுக்கு சென்று பரிசோதனை செய்தனர்.

அதில் அண்ணன்-தம்பி இருவருக்கும் கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பது உறுதியானது. உடனடியாக 2 பேரும் ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டனர்.

மேலும் அவர்களது குடும்பத்தினரும் வீட்டுக்குள் தனிமைப்படுத்தப்பட்டு, அவர்களது வீட்டில் நோட்டீஸ் ஒட்டப்பட்டது. அத்துடன் அந்த பகுதிக்கு வெளிநபர்கள் செல்லாமல் இருக்க அந்த பகுதிக்கு செல்லும் 5 வழிகளையும் அடைத்து சீல் வைத்தனர்.

டெல்லி நிகழ்ச்சியில் பங்கேற்றதாக மதுராந்தகத்தில் 6 பேரும், செய்யூரில் 3 பேரும் அடையாளம் காணப்பட்டனர். அதில் 4 பேர் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் தனிவார்டில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். மற்றவர்கள் அவர்களது வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு, அவர்களது வீட்டில் நோட்டீஸ் ஒட்டப்பட்டது.

மேலும் அவர்களது வீடு அமைந்துள்ள பகுதிகளைச் சுற்றிலும் வெளிநபர்கள் உள்ளே நுழையாதபடியும், அங்குள்ளவர்கள் வெளியே செல்லாத வகையிலும் தடுப்புகள் அமைத்து சீல் வைக்கப்பட்டது. இந்த பகுதிகளில் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ஜான் லூயிஸ் நேரில் ஆய்வு செய்தார்.

சுகாதார பணியாளர்களை கொண்டு அந்த பகுதிகளில் அடிக்கடி கிருமிநாசினி தெளிக்கவும், வெளிநபர்கள் யாரும் அந்த பகுதிக்குள் நுழையாமல் போலீசார் கண்காணிக்கவும் உத்தரவிட்டார். அவருடன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கண்ணன், மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியர் லட்சுமி பிரியா, மதுராந்தகம் துணை போலீஸ் சூப்பிரண்டு மகேந்திரன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

திருவள்ளூர்

இதேபோல் டெல்லி நிகழ்ச்சியில் பங்கேற்ற திருவள்ளூரைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி கண்டறியப்பட்டது.

இதையடுத்து அவரது வீடு அமைந்துள்ள பகுதியில் நகராட்சி சுகாதார அதிகாரிகள் மற்றும் சுகாதார பணியாளர்கள் கிருமிநாசினியை வீடு, வீடாக தெளித்து பொதுமக்களிடம் வீடுகளை விட்டு வெளியே வராமல் அரசுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் அறிவுரைகளை கூறி விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார்கள்.

Next Story