அருகில் ஒருவருக்கு கொரோனா அறிகுறி: காஞ்சீபுரம் ராஜாஜி மார்க்கெட் இடமாற்றம் - நகராட்சி கமிஷனர் தகவல்


அருகில் ஒருவருக்கு கொரோனா அறிகுறி: காஞ்சீபுரம் ராஜாஜி மார்க்கெட் இடமாற்றம் - நகராட்சி கமிஷனர் தகவல்
x
தினத்தந்தி 3 April 2020 10:30 PM GMT (Updated: 3 April 2020 7:58 PM GMT)

காஞ்சீபுரத்தில் பள்ளி வாசலில் தங்கி இருந்த ஒருவருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பது உறுதியானதால், அதன் அருகில் உள்ள ராஜாஜி மார்க்கெட் மூடப்பட்டு வையாவூர் சாலைக்கு மாற்றப்பட்டு உள்ளதாக நகராட்சி கமிஷனர் தெரிவித்தார்.

காஞ்சீபுரம், 

இதுபற்றி காஞ்சீபுரம் நகராட்சி கமிஷனர் மகேஸ்வரி நிருபர்களிடம் கூறியதாவது:-

காஞ்சீபுரம் காந்திரோடு தேரடியில் உள்ள ஒரு பள்ளி வாசலில் தங்க வைக்கப்பட்டு இருந்த வெளிநாடுகளைச் சேர்ந்த 16 பேரில், இந்தோனோஷியாவைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மாவட்ட கலெக்டர் பொன்னையா உத்தரவின்பேரில் பள்ளி வாசலை சுற்றி 2 கிலோ மீட்டர் தூரம் வரை உள்ள சாலைகள் இரும்பு தடுப்பு அமைத்து சீல் வைக்கப்பட்டது. அந்த பள்ளி வாசல் அருகே செயல்பட்டு வந்த ராஜாஜி மார்க்கெட்டுக்கும் மூடப்பட்டது.

பொதுமக்கள் வசதிக்காக ராஜாஜி மார்க்கெட் தற்காலிகமாக காஞ்சீபுரம் பழைய ரெயில் நிலையம் அருகே உள்ள வையாவூர் சாலைக்கு மாற்றப்பட்டு உள்ளது. அங்கு தனியாருக்கு சொந்தமான 5 ஏக்கர் நிலப்பரப்பில் சமூக இடைவெளியுடன் இரும்பு கூடாரத்தால் 110 கடைகள் அமைக்கப்பட்டு நேற்று காலை முதல் செயல்பாட்டுக்கு வந்தது. பொதுமக்கள், சில்லறை வியாபாரிகள் எந்தவித சிரமமும் இன்றி சமூக இடைவெளி விட்டு நின்று வாங்கி செல்கின்றனர். இந்த மாதம் இறுதிவரை இங்கு மார்க்கெட் செயல்படும். மார்க்கெட் உள்ளே நுழையும் முன்பாக சுகாதாரத்துறையினர் பொதுமக்களின் கையில் கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்து அனுப்புகின்றனர். பொதுமக்களின் வசதிக்காக குடிநீர், கழிப்பிட வசதியும் அமைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது நகராட்சி என்ஜினீயர் மகேந்திரன் உடன் இருந்தார்.

திருப்போரூர்

இதேபோல் கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க நெருக்கடியான இடங்களில் உள்ள காய்கறி மார்க்கெட்டுகளை தற்காலிகமயாக பொது இடங்களில் சமூக இடைவெளியுடன் அமைக்கும்படி தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. அதன்படி திருப்போரூர் அரசு ஆஸ்பத்திரியையொட்டி செயல்பட்ட தினசரி காய்கறி சந்தை திருப்போரூர் பஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டு உள்ளது.

கூடுவாஞ்சேரியில் சாலையோரத்தில் வைக்கப்பட்டுள்ள காய்கறி கடைகள் நந்திவரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்துக்கும், திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி காமராஜர் காய்கறி மார்க்கெட் திருத்தணி பஸ் நிலையத்துக்கும் மாற்றப்பட்டு உள்ளது.

Next Story