அதிகரிக்கும் கொரோனா தொற்று: புதுப்பேட்டை, புரசைவாக்கம் பகுதிகள் மூடப்பட்டன - மேலும் 6 இடங்களுக்கு ‘சீல்’
கொரோனா பரவுவதை தடுக்கும் வகையில் சென்னையில் புதுப்பேட்டை, புரசைவாக்கம் உள்பட 8 பகுதிகள் நேற்று மூடப்பட்டன.
சென்னை,
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு அங்கமாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களிடம் இருந்து மேலும் பரவாமல் தடுக்கும் வகையில், தொற்றுநோய் கட்டுப்படுத்துதல் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதன்படி, கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளில் இருந்து குறிப்பிட்ட தொலைவில் வீடுகளில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு, அங்கு வசிப்பவர்கள் அனைவரும் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
அந்த வகையில் டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ராயபுரத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து அவர் வசித்து வந்த சாலையில் போலீசார் இரும்பு தடுப்புகள் அமைத்தனர்.
மேலும் நேற்று அவருடைய வீடு மற்றும் அருகில், சுமார் 500 மீட்டர் தொலைவில் உள்ள அனைத்து வீடுகளிலும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.
சென்னையில் புளியந்தோப்பு, எண்ணூர், தண்டையார்பேட்டை, முத்தியால்பேட்டை, சைதாப்பேட்டை, வேளச்சேரி, புரசைவாக்கம் மற்றும் புதுப்பேட்டை ஆகிய 8 பகுதிகளில் ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து கொரோனா மேலும் பரவக்கூடாது என்பதை கருதி, பெருநகர சென்னை மாநகராட்சியின் உத்தரவுப்படி இந்த 8 பகுதிகளும் நேற்று மூடப்பட்டன. வெளியே இருந்து யாரும் இந்த 8 பகுதிகளுக்குள் நுழைய முடியாது. அதே போல உள்ளே இருந்தும் யாரும் வெளியே செல்ல முடியாது.
இதேபோல மூடப்பட்ட பகுதிகளில் உள்ளவர்கள், அந்த தெருக்களில் நடமாடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மருத்துவ உதவிக்கு மட்டுமே மூடப்பட்ட பகுதிகளில் இருப்பவர்கள் வெளியே வரமுடியும்.
மூடப்பட்ட பகுதிகளில் உள்ளவர்களுக்கு ஏதாவது தேவைப்பட்டால் மாநகராட்சி அதிகாரிகளை தொலை பேசி மூலம் தொடர்புகொண்டு வாங்க வேண்டும்.
இதேபோல் புதுப்பேட்டையில் சி.பா.ஆதித்தனார் சாலை மூடப்பட்டுள்ளது. மேலும் அந்த சாலையில் எழும்பூர் கோர்ட்டு செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே கொரோனா தொற்று காரணமாக மூடப்பட்ட 8 பகுதிகளிலும் ஆளில்லா விமானத்தில் ஒலி பெருக்கியை பொருத்தி, அதில் பொதுமக்கள் யாரும் வெளியே வரவேண்டாம் என்று போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர். இதுதவிர மூடப்பட்ட 8 பகுதிகளில் உள்ள அனைத்து நுழைவு வாயில்களிலும் யாரும் உள்ளே செல்ல முடியாதவாறும், உள்ளே இருந்து வெளியே வரமுடியாதவாறும் கண்காணிப்பதற்கு போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.
Related Tags :
Next Story