ஊரடங்கால் பாதிப்பு: கட்டிட தொழிலாளர்களுக்கான நிதி உதவி ரூ.2 ஆயிரமாக உயர்வு - முதல்-மந்திரி எடியூரப்பா அறிவிப்பு


ஊரடங்கால் பாதிப்பு: கட்டிட தொழிலாளர்களுக்கான நிதி உதவி ரூ.2 ஆயிரமாக உயர்வு - முதல்-மந்திரி எடியூரப்பா அறிவிப்பு
x
தினத்தந்தி 4 April 2020 12:06 AM GMT (Updated: 4 April 2020 12:06 AM GMT)

ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டு உள்ள கட்டிட தொழிலாளர்களுக்கு நிதி உதவி ரூ.2,000 ஆக உயர்த்த முடிவு செய்து இருப்பதாக முதல்-மந்திரி எடியூரப்பா அறிவித்தார்.

பெங்களூரு, 

கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. அந்த வைரசுக்கு இது வரைக்கும் 125 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதை கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில் பெங்களூருவில் கொரோனாவை தடுப்பது குறித்து முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையில் மந்திரிகள், அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் பெங்களூரு விதான சவுதாவில் நேற்று நடைபெற்றது.

இதில் துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண், வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக், பள்ளி கல்வித்துறை மந்திரி சுரேஷ்குமார், நகர வளர்ச்சித்துறை மந்திரி பைரதி பசவராஜ், உணவு மற்றும் பொதுவினியோகத்துறை மந்திரி கோபாலய்யா, தோட்டக்கலைத்துறை மந்திரி நாராயணகவுடா, தொழிலாளர் நலத்துறை மந்திரி சிவராம் ஹெப்பார், போலீஸ் மந்திரி பசவராஜ் பொம்மை, வீட்டு வசதித்துறை மந்திரி சோமண்ணா, கூட்டுறவுத்துறை மந்திரி எஸ்.டி.சோமசேகர் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தகுதியானவர்களுக்கு உணவு பொருட்கள்

இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து முதல்-மந்திரி எடியூரப்பா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதுவரை இந்த வைரசுக்கு பாதித்தவர்களில் சுமார் 50 சதவீதம் பேர் பெங்களூருவில் உள்ளனர். அதனால் பெங்களூருவில் அந்த வைரசை தடுக்கும் நோக்கத்தில் பெங்களூருவை சேர்ந்த மந்திரிகளுடன் இன்று (அதாவது நேற்று) ஆலோசனை நடத்தினேன். எம்.எல்.ஏ.க்கள் மற்றும் கவுன்சிலர்கள், மத்திய-மாநில அரசுகள் அறிவித்துள்ள ஏழை மக்களுக்கு நிதி உதவி மற்றும் உணவு பொருட்களை தகுதியானவர்களுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டேன்.

ரூ.2 ஆயிரமாக உயர்வு

சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ஏழை மக்களுக்கு 2 மாதங்களுக்கான ஓய்வூதியம் ஒரே நேரத்தில் வழங்கப்படுகிறது. கட்டிட தொழிலாளர்களுக்கு ரூ.1,000 வழங்க முடிவு செய்யப்பட்டது. இதை ரூ.2 ஆயிரமாக உயர்த்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. கட்டிட கட்டுமான பணி நடைபெறும் இடத்தில் தங்கியுள்ள தொழிலாளர்களுக்கு கழிவறை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

முதல்-மந்திரியின் நிவாரண நிதிக்கு அதிகளவில் நன்கொடைகள் பெற மந்திரிகள், தொழில் அதிபர்கள் உள்பட முக்கியமான பிரமுகர்களை சந்தித்து பேச வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளேன்.

இவ்வாறு எடியூரப்பா கூறினார்.

Next Story