டெல்லி மாநாட்டிற்கு சென்று திரும்பியவர்களில் பண்ருட்டி, பரங்கிப்பேட்டையை சேர்ந்த 3 பேருக்கு கொரோனா - மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை


டெல்லி மாநாட்டிற்கு சென்று திரும்பியவர்களில் பண்ருட்டி, பரங்கிப்பேட்டையை சேர்ந்த 3 பேருக்கு கொரோனா - மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை
x
தினத்தந்தி 4 April 2020 4:30 AM IST (Updated: 4 April 2020 8:49 AM IST)
t-max-icont-min-icon

டெல்லி மாநாட்டிற்கு சென்று திரும்பியவர்களில் பண்ருட்டி, பரங்கிப்பேட்டையை சேர்ந்த 3 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களுக்கு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

கடலூர்,

கடலூர் மாவட்ட கலெக்டர் அன்புசெல்வன் நேற்று மாலை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- டெல்லியில் நடைபெற்ற முஸ்லிம்கள் மாநாட்டில் கலந்துகொண்ட கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 40 பேரில் கடலூர் அரசு மருத்துவமனையில் 16 பேரும், விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் 8 பேரும், சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 16 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களின் ரத்த மாதிரி சேகரித்து பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. இதில் 17 பேரின் அறிக்கை வந்துள்ளது. இதில் 3 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 14 பேருக்கு இந்த வைரஸ் தொற்று இல்லை. இன்னும் 15 பேரின் ரத்த பரிசோதனை அறிக்கை நாளை (அதாவது இன்று) வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் 8 பேரின் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு, இன்று பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் ஏற்கனவே கொரோனா வார்டில் சிகிச்சையில் இருந்து இறந்துபோன ராஜவள்ளி என்ற பெண்ணுக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்று தெரிய வந்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள 3 பேரில் 2 பேர் பண்ருட்டியை சேர்ந்தவர்கள். இதில் ஒருவருக்கு 54 வயது. இன்னொருவருக்கு 62 வயது. இவர்கள் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 3-வது நபர் பரங்கிப்பேட்டையை சேர்ந்தவர், இவருக்கு 41 வயது. இவர் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பாதிக்கப்பட்ட 3 பேரின் வீடுகள் அமைந்துள்ள இடத்தில் இருந்து 7 கிலோ மீட்டர் தொலைவுக்கு உட்பட்ட பகுதிகளை தீவிர கண்காணிப்பு பகுதியாக அறிவித்து அந்த பகுதியில் யாருக்கேனும் கொரோனா வைரஸ் தொற்று இருக்கிறதா? என்பதை கண்டறியும் பணியும் தீவிரமாக நடந்து வருகிறது. மேலும் நேற்றைய நிலவரப்படி வெளிநாடுகளில் இருந்து கடலூர் மாவட்டத்திற்கு வந்த 3 ஆயிரத்து 613 பேர், அவர்களது வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு, தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

கடலூர் மாவட்டத்தை பொறுத்தவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் மற்றும் உறுதி செய்யப்படாதவர்கள் என்று மொத்தம் 16 பேர் கடலூர் அரசு தலைமை மருத்துவமனையிலும், 33 பேர் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், 8 பேர் விருத்தாசலம் அரசு மருத்துவமனையிலும் என மொத்தம் 57 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Next Story