கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து சமுதாய தலைவர்களுடன் ஆலோசனை கூட்டம் - கலெக்டர் பிரபாகர் தலைமையில் நடந்தது


கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து சமுதாய தலைவர்களுடன் ஆலோசனை கூட்டம் - கலெக்டர் பிரபாகர் தலைமையில் நடந்தது
x
தினத்தந்தி 3 April 2020 10:00 PM GMT (Updated: 4 April 2020 3:56 AM GMT)

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து சமுதாய தலைவர்களுடன் ஆலோசனை கூட்டம் கலெக்டர் பிரபாகர் தலைமையில் நேற்று நடந்தது.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து சமுதாய தலைவர்களுடன் ஆலோசனை கூட்டம் கலெக்டர் பிரபாகர் தலைமையில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பண்டி கங்காதர், மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் ராமமூர்த்தி, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல், கலெக்டர் அலுவலக மேலாளர் ஜெய்சங்கர், தனி தாசில்தார் (பேரிடர் மேலாண்மை) சத்தியா, கிறிஸ்தவ, இஸ்லாமிய சமுதாய பிரதிநிதிகள், ஜைன மத பிரதிநிதிகள், இந்து அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கலெக்டர் பிரபாகர் பேசியதாவது:-

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு கண்காணிக்க உதவி கலெக்டர்கள், தாசில்தார்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மாநகராட்சி, நகராட்சி ஆணையர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள், துணை கலெக்டர்கள் அடங்கிய 10 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் அறிவுரைகள் தொடர்ந்து அனைத்து அலுவலர்களுக்கும் தகவல் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

வெளி நாடுகள், வெளிமாநிலங்களில் இருந்து கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு பிப்ரவரி, மார்ச் மாதங்களில் வந்தவர்களுக்கு உரிய அறிவுரை வழங்கி மருத்துவ பரிசோதனை செய்து தங்கள் இல்லங்களில் தனிமை படுத்தப்பட்டனர். அவர்களுக்கு சிகிச்சையும் வழங்கப்பட்டது. இதுவரை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் எவருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என ஆய்வு அறிக்கை வந்துள்ளது. வெளி மாநிலங்களில் இருந்து வந்துள்ள தொழிலாளர்களுக்கு தங்கும் வசதி, உணவு, குடிநீர், உணவு பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கும் பணிகள், விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கியும், ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு பணி முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் சமூக வலைதளங்களில் வதந்தி பரப்புவோர் மீது காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனையில் 100 படுக்கைகள் கொண்ட தீவிர சிகிச்சை பிரிவும், ஓசூர் அரசு மருத்துவமனையில் 60 படுக்கைகள் கொண்ட தீவிர சிகிச்சை பிரிவும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. 50 எண்ணிக்கை கொண்ட வெண்டிலேட்டர்கள் தயார் நிலையில் உள்ளது.

இதனால் எதிர்காலத்தில் எந்த ஒரு நோய்க்கும் நிரந்தரமாக சிகிச்சை அளிக்க முடியும். மாவட்டத்தில் உள்ள அனைத்து சுகாதார நிலையங்களிலும் ரூ.1.50 கோடி மதிப்பில் அத்தியாவசிய தேவைகளான படுக்கைகள், போர்வைகள், மருத்துவ உபகரணங்கள் தயார் நிலையில் உள்ளது. பொதுமக்களுக்கு காய்கறிகள், அத்தியாவசிய பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஆகவே தங்கள் பகுதியில் உள்ள மக்களுக்கு அச்சமின்றி இருக்க வேண்டும். இது குறித்து அனைத்து சமுதாய தலைவர்கள் பொதுமக்களிடம் தெரிவிக்க வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் கூறினார்.

Next Story