சமூக இடைவெளி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த அனைத்து மத பிரதிநிதிகளும் அதிகாரிகளுடன் இணைந்து செயல்பட வேண்டும்


சமூக இடைவெளி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த அனைத்து மத பிரதிநிதிகளும் அதிகாரிகளுடன் இணைந்து செயல்பட வேண்டும்
x
தினத்தந்தி 4 April 2020 8:07 AM GMT (Updated: 4 April 2020 8:07 AM GMT)

சமூக இடைவெளி குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த அனைத்து மத பிரதிநிதிகளும் மாவட்ட நிர்வாக அதிகாரிகளுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்று ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் விஜயலட்சுமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

திண்டுக்கல்,

திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் அனைத்து மத பிரதிநிதிகளுடன் சேர்ந்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது. இதற்கு கலெக்டர் விஜயலட்சுமி தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக அத்தியாவசிய தேவைக்காக வெளியே வரும் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிப்பதில்லை. கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகிவிடுவோம் என்ற விழிப்புணர்வு அவர்களிடம் இல்லாததே இதற்கு காரணம். எனவே பொதுமக்களிடம் சமூக இடைவெளி குறித்தும், வீடுகளில் தங்களை தாங்களே தனிமைப்படுத்திக்கொள்வது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியமாகிறது. எனவே அனைத்து மத பிரதிநிதிகளும் மாவட்ட நிர்வாக அதிகாரிகளுடன் இணைந்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளை மேற்கொள்ள வேண்டும். அப்போது தான் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க முடியும்.

மேலும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டவர்களும் திண்டுக்கல் தலைமை அரசு மருத்துவமனையில் தனிவார்டில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு மேலும் சிறப்பான முறையில் சிகிச்சை அளிப்பதற்காக கரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மேலும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் வசித்த இடங்கள் கண்டறியப்பட்டு அந்த இடங்களை சுற்றி 5 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு பொதுமக்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story