பவானி நகராட்சி சார்பில் நடமாடும் காய்கறி வாகனம் - அமைச்சர் கே.சி.கருப்பணன் தொடங்கி வைத்தார்
பவானி நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் நடமாடும் காய்கறி வாகனத்தின் முதல் விற்பனையை அமைச்சர் தொடங்கி வைத்தார்.
பவானி,
பவானி மீன் மார்க்கெட் அருகே உள்ள ரேஷன் கடையில் ரூ.1000, அரிசி, சர்க்கரை, கோதுமை, துவரம் பருப்பு, சமையல் எண்ணெய் போன்ற நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு பவானி தாசில்தார் பெரியசாமி தலைமை தாங்கினார்.
வட்டார வழங்கல் அலுவல் அதிகாரி நாகலட்சுமி முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் கலந்து கொண்டு ரூ.1000, நிவாரண பொருட்கள் வழங்கினார். மொத்தம் பவானி தாலுகாவில் உள்ள 75 ஆயிரத்து 42 ரேஷன் கார்டுதாரர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து பவானி நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் நடமாடும் காய்கறி வாகனத்தின் முதல் விற்பனையை அமைச்சர் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறும்போது, ‘ரூ.130–க்கு தக்காளி, வெங்காயம், கத்தரிக்காய், வெண்டைக்காய், புடலங்காய் போன்ற காய்கறிகள் அடங்கிய தொகுப்பு இந்த வாகனம் மூலம் பவானி நகராட்சிக்கு உள்பட்ட 28 வார்டுகளிலும் காலை முதல் மாலை வரை தெருத்தெருவாக கொண்டு செல்லப்பட்டு விற்பனை செய்யப்படும். எனவே பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம். காய்கறிகள் தேவைப்படுவோர் வீட்டுக்கு அருகே வரும் வாகனத்தை நிறுத்தி பெற்றுக் கொள்ளலாம்’ என்றார்.
நிகழ்ச்சியில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் என்.கிருஷ்ணராஜ், பவானி நகராட்சி ஆணையாளர் பாரிசான், நகராட்சி தலைமை பொறியாளர் கதிர்வேலு, இளையராஜா, சுகாதார ஆய்வாளர் செந்தில்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து புதிய பஸ் நிலையம் மற்றும் அம்மா உணவகம் ஆகியவற்றை பார்வையிட்ட அமைச்சர் கே.சி.கருப்பணன், முறையாக கிருமிநாசினி தெளிக்கப்படுகிறதா? என்று ஆய்வு செய்தார்.
Related Tags :
Next Story