கூடங்குளத்தில் பயங்கரம்: விவசாயி சரமாரி குத்திக்கொலை - போலீசில் மைத்துனர் சரண்
கூடங்குளத்தில் விவசாயி கத்தியால் சரமாரியாக குத்திக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவரது மைத்துனர் போலீசில் சரண் அடைந்தார். இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
கூடங்குளம்,
நெல்லை மாவட்டம் கூடங்குளம் காந்திநகரை சேர்ந்தவர் அய்யாத்துரை மகன் விஜய் (வயது 33), விவசாயி. இவர் அதே பகுதியை சேர்ந்த உடைய பெருமாள் மகள் சுதா என்பவரை திருமணம் செய்திருந்தார். விஜய்க்கும், சுதாவின் தம்பி மயில் முருகன் (22) என்பவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு, குடும்ப தகராறாக மாறியது. இதுதொடர்பாக இருவர் மீதும் கூடங்குளம் போலீசில் வழக்குகள் உள்ளன.
இந்த நிலையில் நேற்று காலையில் மீண்டும் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரம் அடைந்த மயில்முருகன், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் விஜயை சரமாரியாக குத்தியதாக கூறப்படுகிறது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதனை பார்த்த குடும்பத்தினர், விஜயின் உடலை பார்த்து கதறி அழுதனர்.
பின்னர் மயில்முருகன் அங்கிருந்து நேராக கூடங்குளம் போலீஸ் நிலையத்துக்கு சென்று சரண் அடைந்தார். போலீசாரிடம், தனது அக்காள் கணவரை கொலை செய்து விட்டதாக தெரிவித்தார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் உடனடியாக மயில்முருகனை கைது செய்தனர். பின்னர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். விஜயின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுபற்றி விஜயின் தாயார் முருகம்மாள், கூடங்குளம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்குப்பதிவு செய்தார். இன்ஸ்பெக்டர் அந்தோணி ஜெகதா விசாரணை நடத்தி வருகிறார்.
கொலை செய்யப்பட்ட விஜய்க்கு லிபினேஷ் (4) என்ற மகனும், தாசிகா (2) என்ற பெண் குழந்தையும் உள்ளனர். குடும்ப தகராறில் விவசாயியை அவருடைய மைத்துனரே கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story