கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நெல்லையில் ‘டிரோன்’ மூலம் கிருமி நாசினி தெளிக்கும் பணி - கலெக்டர் ஷில்பா தொடங்கி வைத்தார்


கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நெல்லையில் ‘டிரோன்’ மூலம் கிருமி நாசினி தெளிக்கும் பணி - கலெக்டர் ஷில்பா தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 4 April 2020 10:30 PM GMT (Updated: 4 April 2020 7:25 PM GMT)

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நெல்லையில் ‘டிரோன்‘ மூலம் கிருமி நாசினி தெளிக்கும் பணியை கலெக்டர் ஷில்பா தொடங்கி வைத்தார்.

நெல்லை, 

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் இந்தியாவில் பரவி வருகிறது. இதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில், குறுகலான தெருக்கள், உயரமான கட்டிடங்கள், முக்கிய வீதிகள் உள்ளிட்டவற்றில் ‘டிரோன்‘ எந்திரம் மூலம் எப்படி கிருமி நாசினி தெளிப்பது என்பது குறித்து ஒத்திகை நடந்தது. இந்த ஒத்திகை நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா முன்னிலையில் நடந்தது.

குறுகலான தெருக்கள், உயரமான கட்டிடங்கள், முக்கிய வீதிகள் உள்ளிட்டவற்றில் ‘டிரோன்‘ மூலம் கிருமி நாசினி தெளிப்பது குறித்து ஒத்திகை நடத்தப்பட்டது. இதையடுத்து கலெக்டர் ஷில்பா, மாநகர பகுதியில் கிருமி நாசினி தெளிக்கும் பணியை தொடங்கி வைத்தார்.

அப்போது நெல்லை மாநகராட்சி ஆணையாளர் கண்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா வழிகாட்டுதலின்படி, மாநகராட்சி சார்பில் கொரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. பொதுமக்கள் அதிகம் கூடுவதை தவிர்க்கவும், சமூக இடைவெளியை நடைமுறைப்படுத்தும் பொருட்டும் அத்தியாவசிய பொருட்கள், மளிகை பொருட்களை நேரடியாக வீடுகளுக்கு சென்று கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

உழவர் சந்தை மூலமும், மாநகராட்சி நடமாடும் கடைகள் மூலமாகவும் வீடு தேடி சென்று காய்கறிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

மாநகராட்சி தூய்மை பணியாளர்கள், டெங்கு ஒழிப்பு பணியாளர்கள் என 1,100 பணியாளர்கள் மூலம் தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தூய்மைப்பணிகள் மற்றும் தொற்றுநோய் தடுப்பு பணிகளை தீவிரப்படுத்தும் வகையில் கிருமி நாசினி தெளிக்கும் பணி மேற்கொள்ளப்பட உள்ளது. ‘டிரோன்‘ மூலம் கிருமி நாசினி தெளிக்கப்பட உள்ளது. அதற்கான பணியை கலெக்டர் தொடங்கி வைத்துள்ளார்.

‘கேப் ஜியோஸ்பேசியல் சர்வீஸ்‘ என்ற நிறுவனத்தின் ‘டிரோன்‘ மூலம் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது. இதன்மூலம் குறுகலான தெருக்கள், 50 அடி உயரமுள்ள கட்டிடங்கள், முக்கிய வீதிகள், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கிருமி நாசினி தெளிக்கலாம். இந்த எந்திரம் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை 10 நிமிடத்துக்கு ஒரு முறை 10 லிட்டர் கிருமி நாசினியை தெளிக்கும். பேட்டரி ரிமோட் மூலமாக இயக்கலாம். தேவைப்பட்டால் கூடுதல் எந்திரங்கள் வரவழைக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது நெல்லை மாநகர துணை போலீஸ் கமிஷனர் சரவணன், உதவி கலெக்டர் (பயிற்சி) சிவகுருநாதன், செய்தி மக்கள் தொடர்புத்துறை துணை இயக்குனர் அண்ணா, தச்சநல்லூர் உதவி ஆணையாளர் அய்யப்பன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Next Story