ஸ்ரீபெரும்புதூர் அருகே, பழைய ரேஷன் கடை மூடப்பட்டதை கண்டித்து பொதுமக்கள் போராட்டம்


ஸ்ரீபெரும்புதூர் அருகே, பழைய ரேஷன் கடை மூடப்பட்டதை கண்டித்து பொதுமக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 5 April 2020 4:00 AM IST (Updated: 5 April 2020 1:39 AM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீபெரும்புதூர் அருகே பழைய ரேஷன் கடை மூடப்பட்டதை கண்டித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.

ஸ்ரீபெரும்புதூர், 

காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட குண்டுபெரும்பேடு ஊராட்சியில் உள்ள ரேஷன் கடையில் குண்டுபெரும்பேடு, ஓட்டங்கருனை, நல்லாம்பெரும்பேடு ஆகிய பகுதியில் உள்ள பொதுமக்கள் பொருட்கள் வாங்கி வந்தனர்.

இந்த ரேஷன் கடை ஜனவரி மாதம் வேறு பகுதியில் உள்ள புதிய கட்டிடத்துக்கு இடம் மாற்றப்பட்டது. இந்த புதிய கடைக்கு மக்கள் 3 கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டியது இருந்ததால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்ரீபெரும்புதூர் எம்.எல்.ஏ. பழனியிடம் மனு கொடுத்தனர்.

இதையடுத்து பழைய இடத்திலும், புதிய இடத்திலும் என ரேஷன் கடை செயல்பட்டு வந்தது. இந்தநிலையில் பொதுமக்கள் ரேஷன் கடைக்கு சென்றபோது பூட்டப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி அதிகாரிகளிடம் கேட்டபோது, பழைய கடையில் உரகிடங்காக மாற்றப்பட்டது. எனவே அனைவரும் புதிய கட்டிடத்தில் செயல்படும் ரேஷன் கடையில்தான் பொருட்கள் வாங்க வேண்டும் என கூறினர்.

எந்தவித முன்அறிவிப்பும் இன்றி பழைய ரேஷன் கடையை மூடியதால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள், ரேஷன் கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

மேலும் இதுபற்றி காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர், ஸ்ரீபெரும்புதூர் வருவாய் கோட்ட அலுவலர் ஆகியோருக்கு வாட்ஸ்-அப் மூலம் கோரிக்கை மனுவை அனுப்பி வைத்தனர்.

Next Story