கொரோனா வைரஸ் அச்சத்தால் முட்செடிகளை வைத்து சாலைகளை அடைத்த கிராம மக்கள்


கொரோனா வைரஸ் அச்சத்தால் முட்செடிகளை வைத்து சாலைகளை அடைத்த கிராம மக்கள்
x
தினத்தந்தி 4 April 2020 10:15 PM GMT (Updated: 4 April 2020 9:17 PM GMT)

முட்செடிகளை வைத்து சாலைகளை அடைத்த கிராம மக்கள் யாரும் ஊருக்குள் வரக்கூடாது என்று அறிவிப்பு பலகை வைத்துள்ளனர்.

தொண்டி, 

திருவாடானை தாலுகா மங்கலக்குடி பகுதியில் உள்ள பல்வேறு கிராமங்களில் தற்போது கொரோனா வைரஸ் அச்சத்தால் பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர். இதையடுத்து வேறு யாரும் ஊருக்குள் வரக்கூடாது என்பதற்காக சாலையில் கருவேல முட்செடிகளை வைத்தும், டிராக்டர் போன்ற வாகனங்கள் மூலம் வைத்துள்ளனர்.

திருவாடானை தாலுகா கட்டவிளாகம் ஊராட்சியை சேர்ந்த இளைஞர்கள் சிவகங்கை மாவட்ட பகுதியில் இருந்து யாரும் ஊருக்குள் வராத வண்ணம் கட்டவிளாகம் கிராமத்திலும், புதுக்கோட்டை மாவட்ட பகுதியில் இருந்து யாரும் வராத வண்ணம் கீழ்க்குடி கிராமத்தின் அருகிலும் சாலையில் முட்செடிகளை வைத்து அடைத்துள்ளனர்.

இதேபோல இந்த ஊராட்சியில் உள்ள கள்ளவழியேந்தல், ருத்திரன்பட்டி, கீழ்க்குடி போன்ற கிராம எல்லையில் முட்செடிகள் வைத்து சாலை தடுப்புகளை அமைத்துள்ளனர். மங்கலக்குடியில் இருந்து தேவகோட்டை செல்லும் சாலையில் பிரிந்து செல்லும் கடம்பூர், சிவகங்கை மாவட்டம் கண்ணங்குடி சாலையை குருந்தங்குடி கிராமத்தில் டிராக்டர் டிரெய்லர் மற்றும் முட்செடிகளை வைத்து அடைத்து வைத்துள்ளனர். சம்பநெட்டி, கலியணி, விசும்பூர் கிராம சாலைகளும் அடைக்கப்பட்டுள்ளன.

அரசத்தூர் ஊராட்சி அடுத்தகுடி கிராம மக்கள் ஊருக்குள் செல்லும் சாலையை முட்செடிகள் வைத்து அடைத்து ஊருக்குள் வெளிநபர்கள் யாரும் வரக்கூடாது என்று அறிவிப்பு பலகை வைத்துள்ளனர். இந்த சாலைகள் அடைக்கப்பட்டுள்ளதால் இதன் வழியாக வழக்கமாக செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகனங்கள் மாற்றுப்பாதையில் செல்வதுடன் பெரும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.

தொண்டி அருகே உள்ள முள்ளிமுனை கிராம மக்கள் மீன்பிடி தொழிலில் மட்டுமே ஈடுபட்டு வருகின்றனர். கொரோனா வைரஸ் பாதிப்பை தொடர்ந்து ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. இந்தநிலையில் முள்ளிமுனை பெரிய கிராமம் என்பதால் இந்த ஊரின் எல்லையில் முள்ளிமுனை ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் சோதனைச்சாவடி அமைத்து 24 மணி நேரமும் ஊராட்சி தலைவர் அமிர்தவல்லி மேகமலை, ஊராட்சி செயலாளர் செந்தில்நாதன் மற்றும் உறுப்பினர்கள் இரவு பகலாக பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அந்த வழியாக வரும் பொதுமக்களை சோதனைக்குபின் ஊருக்குள் அனுமதிக்கின்றனர். மேலும் ஊருக்குள் இருந்து யாரும் வெளியே செல்லவும் அனுமதிப்பதில்லை. வெளியில் இருந்து வரும் கியாஸ் சிலிண்டர் வாகனங்கள், காய்கறி, பழங்கள் போன்ற அத்தியாவசியமான பொருட்களை ஏற்றி வரும் வாகனங்களை மட்டும் கிருமிநாசினி மருந்து தெளித்து கிராமத்திற்குள் அனுமதிக்கின்றனர்.

Next Story