மக்களின் ஒத்துழைப்பை பொறுத்து ஊரடங்கு விலக்கி கொள்ளப்படும் - முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே பேச்சு


மக்களின் ஒத்துழைப்பை பொறுத்து ஊரடங்கு விலக்கி கொள்ளப்படும் - முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே பேச்சு
x
தினத்தந்தி 4 April 2020 11:45 PM GMT (Updated: 4 April 2020 11:21 PM GMT)

அரசுக்கு பொதுமக்கள் அளிக்கும் ஒத்துழைப்பை பொறுத்து தான் 14-ந் தேதிக்கு பிறகு ஊரடங்கு விலக்கி கொள்ளப்படும் என கூறிய முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே, கொரோனாவை விரட்ட வீட்டுக்குள் இருங்கள், சமூக இடைவெளியை கடைப்பிடியுங்கள் என வேண்டுகோள் விடுத்து உள்ளார்.

மும்பை, 

மராட்டியத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்தநிலையில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே வீடியோ மூலம் நேற்று பொதுமக்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

கொரோனா வைரஸ் நம்முடன் விளையாட்டை விளையாடி கொண்டு இருக்கிறது. நமது மாநில மக்களிடம் தைரியம், ஒழுக்கம், தன்னம்பிக்கைக்கு எந்த குறையும் இல்லை. இதுபோன்ற சூழலில் தன்னம்பிக்கை மிகவும் அவசியம். என்னிடம் அது இருக்கிறது. உங்களுக்கும் அது இருக்கிறது என்பது எனக்கு தெரியும்.

உங்களிடம் தன்னம்பிக்கை இருந்தால் கொரோனா வைரசுக்கு எதிரான போரில் நாம் வெற்றி பெறுவதை யாராலும் தடுக்க முடியாது. இந்த ஊரடங்கு காலத்தில் ஒழுக்கம் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றுமாறு பொதுமக்களை தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன். ஏன் என்றால் நான் உங்களை பாதுகாக்க விரும்புகிறேன். தயவு செய்து வீட்டில் இருங்கள்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதிகம் பேரை சோதனைக்கு உட்படுத்துவதால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கிறது. தற்போது வரை 500-க்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 51 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனா்.

கொரோனாவை போல மற்றொரு வைரசும் நமது சமூக ஒற்றுமைக்கு அச்சுறுத்தலாக உள்ளது. அந்த வைரஸ் போலி செய்திகள் மற்றும் மத, இனவாத வெறுப்பு ஆகும். அந்த வைரசிடம் இருந்தும் நாம் மராட்டியத்தை காக்க வேண்டும். பொய்யான தகவல்கள் மற்றும் வீடியோக்களை பரப்புவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். விளையாட்டுக்குகூட அது போன்ற செயல்களில் ஈடுபடாதீர்கள்.

கொரோனாவுக்கு எதிராக சிறிய மற்றும் பெரிய வகையில் பலர் உதவி செய்து வருகின்றனர். அவர்கள் அனைவருக்கும் நன்றி. விளையாட்டு வீரர்கள், நடிகர்கள், பிரபலங்கள், நிறுவனங்கள் உதவி செய்து வருகிறார்கள். பலர் தங்கள் இடங்களை கொடுத்து உள்ளனர். ஷாருக்கான் அதை செய்து இருக்கிறார். தாஜ், டிரிடன்ட் ஓட்டல்கள் டாக்டர்கள் தங்க அனுமதி வழங்கி உள்ளது.

பலர் உணவுப்பொருட்களும், பணத்தையும் தந்து உள்ளனர். சோலாப்பூரை சேர்ந்த 7 வயது சிறுமி ஆராத்யா அவளது பிறந்தநாள் கொண்டாட்ட பணத்தை முதல்-மந்திரி நிவாரண நிதிக்கு அளித்துள்ளார். அவருக்கு நன்றி.

மராட்டியத்தில் உள்ள சுமார் 5 லட்சம் வெளிமாநில தொழிலாளர்களுக்கு 3 நேர உணவு, தங்குமிடம், மருத்துவ வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. அதுபோல வெளிமாநிலத்தில் சிக்கி உள்ள மராட்டிய மக்களை கவனித்து கொள்ளுமாறு பிறமாநில முதல்-மந்திரிகளை கேட்டு கொள்கிறேன்.

அடுத்த அறிவிப்பு வரும் வரை மராட்டியத்தில் மத, அரசியல், விளையாட்டு நிகழ்ச்சிகள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் அனைத்து கட்சியினரும் என்னோடு உள்ளனர். பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் என்னுடம் பேசி கொண்டு தான் இருக்கிறார்கள். மவுலானாக்கள் மற்றும் மத தலைவர்களுடன் தொடர்பில் உள்ளேன்.

ஏற்கனவே நாம் குடிபட்வா, ராமநவமியை வீடுகளுக்குள் கொண்டாடினோம். மற்ற மதத்தினரும் அதே போல அவர்களின் பண்டிகைகளை கொண்டாடுவார்கள் என நம்புகிறேன். அரசு உத்தரவுகளுக்கு பொது மக்கள் அளிக்கும் ஒத்துழைப்பை பொறுத்து தான் வருகிற 14-ந் தேதிக்கு பிறகு ஊரடங்கு திரும்ப பெறப்படும்.

இவ்வாறு உத்தவ் தாக்கரே பேசினார்.

Next Story