டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் கொரோனா வைரஸ் பாதித்த பெண்ணுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது


டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் கொரோனா வைரஸ் பாதித்த பெண்ணுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது
x
தினத்தந்தி 4 April 2020 11:45 PM GMT (Updated: 4 April 2020 11:33 PM GMT)

டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில், கொரோனா வைரஸ் பாதித்த பெண்ணுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. தாயும், குழந்தையும் நலமாக உள்ளதாக டாக்டர்கள் அறிவித்தனர்.

புதுடெல்லி, 

டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் மூத்த உறைவிட மருத்துவராக பணியாற்றி வருகிற ஒருவரது மனைவி, கர்ப்பிணியாக இருந்து வந்தார். 9 மாத கர்ப்பிணியான அவருக்கு கொரோனா வைரஸ் பாதித்தது. இது கடந்த வியாழக்கிழமையன்று உறுதி செய்யப்பட்டது.

முதலில் அவரது கணவருக்குத்தான் கொரோனா வைரஸ் பாதித்தது. கணவரின் சகோதரருக்கும் கொரோனா வைரஸ் பாதித்துள்ளது.

இந்த நிலையில், எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டிருந்த அந்தப் பெண் பிரசவிக்க ஒரு வாரம் இருந்தது. ஆனால் அவருக்கு அறுவை சிகிச்சை செய்து குழந்தையை எடுக்க டாக்டர்கள் முடிவு செய்தனர்.

நேற்று முன்தினம் அந்தப் பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அவருக்கு அழகான, ஆரோக்கியமான ஆண் குழந்தை பிறந்தது.

டெல்லியில் கொரோனா வைரஸ் பாதித்த ஒரு கர்ப்பிணிக்கு குழந்தை பிறந்திருப்பது இதுவே முதல் முறை ஆகும்.

இது குறித்து அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள் குழுவுக்கு தலைமை தாங்கிய எய்ம்ஸ் ஆஸ்பத்திரியின் மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவ நிபுணர் பேராசிரியை டாக்டர் நீரஜா பாட்லா கூறியதாவது:-

அந்தப் பெண்ணுக்கு வெள்ளிக்கிழமை மாலையில் ஆரோக்கியமான ஆண் குழந்தை பிறந்தது. ஒரு வாரம் முன்னதாகவே அறுவை சிகிச்சை செய்து குழந்தையை எடுத்து விட்டோம். குழந்தை நல்ல நிலையில் இருக்கிறது.

தாய்க்கு கொரோனா வைரஸ் பாதித்திருந்ததால், குழந்தைக்கும் அது பரவி இருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அந்த குழந்தையை நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். தற்போது வரை கொரோனாவுக்கான எந்த அறிகுறியும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

குழந்தைக்கு தாய், தாய்ப்பால் புகட்டி வருகிறார். தாய்ப்பாலூட்டுவதால் தாயிடம் இருந்து குழந்தைக்கு கொரோனா வைரஸ் தொற்றிக்கொள்ளும் என்பதற்கு எந்தவொரு ஆதாரமும் இல்லை என்று மற்றொரு மூத்த மருத்துவர் தெரிவித்தார்.

குழந்தை மட்டுமல்ல, தாயும் தற்போது நலமாக உள்ளார். தற்போது அவருக்கு கொரோனா அறிகுறிகள் ஏதும் இல்லை என்றும் அந்த மூத்த மருத்துவர் தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் தொற்றிய கர்ப்பிணிகளுக்கான சிகிச்சை முறைகள் குறித்து ஏற்கனவே எய்ம்ஸ் ஆஸ்பத்திரி நெறிமுறை வகுத்து வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

கொரோனா வைரஸ் பாதித்த நிலையில் பிரசவிக்கிற பெண்கள், தாங்கள் விரும்பினால் குழந்தைக்கு தாய்ப்பாலூட்டலாம், தாய்ப் பாலூட்டுகிறபோது முக கவசம் அணிந்து கொள்ள வேண்டும், குழந்தையை தொடுவதற்கு முன்பாகவும், தாய்ப்பாலூட்டிய பின்னரும் தங்களது கைகளை பெண்கள் சுத்தமாக கழுவ வேண்டும், அவர்கள் தொடுகிற இடங்களில் கிருமிகள் தொற்றிக் கொள்ளாதவாறு சுகாதாரமாக இருக்க வேண்டும் என்றும் உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது.

Next Story