கர்நாடகத்தில் ஒரே நாளில் 16 பேருக்கு கொரோனா - பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 140 ஆக உயர்வு
கர்நாடகத்தில் நேற்று ஒரே நாளில் மேலும் 16 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகி உள்ளது. இதன் மூலம் கர்நாடகத்தில் இந்தநோய் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 140 ஆக அதிகரித்து உள்ளது.
பெங்களூரு,
கர்நாடக அரசின் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கர்நாடகத்தில் நேற்று முன்தினம் வரை 124 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருந்தது. 4 பேர் மரணம் அடைந்துள்ளனர். இந்த நிலையில் மாநிலத்தில் நேற்று புதிதாக மேலும் 16 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது உறுதியாகி இருக்கிறது. இதன் மூலம் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 140 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் பாதித்தவர்களில் 11 பேர் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
நேற்று கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டவர்களின் விவரம் பின் வருமாறு:-
பெங்களூருவை சேர்ந்த 21 வயது இளைஞர், 57 வயது நபர், 43 வயது நபர் ஆகியோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவர்கள் 3 பேரும் ஏற்கனவே வைரஸ் பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்துள்ளனர். அதே போல் பெங்களூருவை சேர்ந்த 78 வயது முதியவர், துபாய்க்கு சென்றுவிட்டு கடந்த மார்ச் மாதம் 17-ந் தேதி பெங்களூரு திரும்பினார். அவருக்கும் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்த 60 வயது நபர், ஜெர்மனி சென்றுவிட்டு பெங்களூரு திரும்பினார். அவருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு இங்குள்ள ஆகாஸ் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார். மைசூருவை சேர்ந்த 38 வயது இளைஞர், துபாய்க்கு சென்றுவிட்டு ஊர் திரும்பினார். அவருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர் மைசூரு கே.ஆர். ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
அதே போல் மைசூருவை சேர்ந்த 19 வயது, 54 வயது, 40 வயது, 34 வயது நபர் மற்றும் 39 வயது நிரம்பிய 2 பேர் உள்பட 6 ேபருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் மைசூரு கே.ஆர். ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர். பல்லாரி மாவட்டம் ஒசப்பேட்டேயை சேர்ந்த 47 வயது பெண்ணுக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை அடுத்து பல்லாரியில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
உடுப்பியில் 2 பெண்கள்
உடுப்பியை சேர்ந்த 63 வயது பெண், துபாய்க்கு சென்றுவிட்டு கடந்த மார்ச் மாதம் 22-ந் தேதி இந்தியாவுக்கு திரும்பினார். அவருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் மங்களூருவில் உள்ள இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தட்சிண கன்னடா மாவட்டத்தை சேர்ந்த 43 வயது பெண், 52 வயது பெண் ஆகியோர் டெல்லி நிஜாமுதீன் மாநாட்டில் பங்கேற்றுவிட்டு கர்நாடகம் திரும்பினர். அவர்களுக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு, மங்களூரு எனிபோயா ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
பெங்களூருவில் 54 பேர், மைசூருவில் 28 பேர், தட்சிண கன்னடாவில் 12 பேர், உத்தர கன்னடாவில் 8 பேர், சிக்பள்ளாப்பூரில் 7 பேர், கலபுரகியில் 4 பேர், பல்லாரியில் 5 பேர், தாவணகெரே, உடுப்பியில் தலா 3 பேர், தார்வார், குடகு தலா ஒருவர், பீதரில் 10 பேர், பெலகாவியில் 3 பேர், பெங்களூரு புறநகரில் ஒருவர் என மொத்தம் 140 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். கொரோனா அறிகுறியுடன் நேற்று 94 பேர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு உள்ளனர். கொரோனா அறிகுறி உள்ளவர்களின் எண்ணிக்கை 440 ஆக உள்ளது. நேற்று 94 பேர் வீடு திரும்பினர்.
பெங்களூருவில் விக்டோரியா, பவுரிங் ஆஸ்பத்திரிகள், பெங்களூரு புறநகரில் ராஜராஜேஸ்வரி மருத்துவ கல்லூரி, மைசூரு மாவட்ட தலைமை மருத்துவமனை, மங்களூரு வென்லாக் ஆஸ்பத்திரி, கலபுரகி இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி, கதக், பல்லாரி மாவட்ட தலைமை மருத்துவமனைகள், சிவமொக்கா மெக்கான் ஆஸ்பத்திரி ஆகியவை கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தயாராக வைக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story