ஜெயங்கொண்டம், செந்துறை, ஆண்டிமடத்தில் மருந்து கடைகள் உள்பட 11 கடைகளுக்கு ‘சீல்’


ஜெயங்கொண்டம், செந்துறை, ஆண்டிமடத்தில் மருந்து கடைகள் உள்பட 11 கடைகளுக்கு ‘சீல்’
x
தினத்தந்தி 5 April 2020 3:30 AM IST (Updated: 5 April 2020 8:42 AM IST)
t-max-icont-min-icon

ஜெயங்கொண்டம், செந்துறை, ஆண்டிமடம் ஆகிய பகுதிகளில் மருந்து கடைகள் உள்பட மொத்தம் 11 கடைகளுக்கு அதிகாரிகள் ‘சீல்‘ வைத்தனர்.

ஜெயங்கொண்டம்,

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதையொட்டி, அரியலூர் மாவட்டத்தில் அத்தியாவசிய தேவைக்கான கடைகள் திறக்க நேரக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. கடைகளுக்கு செல்லும் மக்கள் சமூக இடைவெளியை பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டது.

இதேபோல் ஜெயங்கொண்டத்தில் இயங்கி வந்த ஒரு மருந்து கடையில் சமூக இடைவெளியை கடைபிடிக்குமாறும், பொதுமக்கள் முக கவசம் அணிந்து கடைக்கு வர கூறுமாறும் கடைக்காரரிடம் ஜெயங்கொண்டம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வசந்த் கடந்த ஒருவாரமாக அறிவுறுத்தி வந்தார். ஆனால் அங்கு விதிகள் கடைபிடிக்கப்படவில்லை.

இந்நிலையில் நேற்று ஜெயங்கொண்டம் தாசில்தார் கலைவாணன் மற்றும் போலீஸ் துணை சூப்பிரண்டு மோகன்தாஸ் தலைமையில் இன்ஸ்பெக்டர் தமிழரசி மற்றும் போலீசார் அந்த மருந்து கடைக்கு சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கு சமூக இடைவெளி கடைபிடிக்காமலும், முகக்கவசங்கள் அணியாமலும் விழிப்புணர்வின்றி மருந்து விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அந்த மருந்து கடைக்கு ‘சீல்‘ வைக்கப்பட்டது. மேலும் கடை நிர்வாகிக்கு முக கவசம் அணியவும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவும் அறிவுறுத்தப்பட்டது. இதேபோல் சமூக இடைவெளியை பின்பற்ற தவறியதாக நேற்று ஜெயங்கொண்டத்தில் இயங்கி வந்த மளிகை மற்றும் வெற்றிலை கடை என 2 கடைகளுக்கு ‘சீல்‘ வைக்கப்பட்டது. ஜெயங்கொண்டம் பகுதியில் பொதுமக்கள் கோரோனா வைரஸ் தொற்றின் வீரியம் உணராது அத்தியாவசிய பொருட்கள் வாங்கும் இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்காத நிலையே உள்ளது. நாளுக்கு நாள் கொரோனா வைரசால் பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், அதை தடுக்க தமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேபோல் செந்துறை பஸ் நிலையம் அருகே இயங்கி வரும் மளிகை கடை விதிமுறைகளை மீறி செயல்பட்டு வந்தது. இதைத்தொடர்ந்து உடையார்பாளையம் கோட்டாட்சியர் பூங்கோதை தலைமையில் செந்துறை தாசில்தார் முத்துகிருஷ்ணன் மற்றும் போலீசார் அந்த மளிகை கடைக்கு ‘சீல்‘ வைத்தனர். மேலும் தாலுகா அலுவலகம் அருகே உள்ள ஒரு பெட்டிக்கடை, நல்லாம்பாளையத்தில் மளிகை கடை, உஞ்சினியில் பெட்டிக்கடை, இரும்புலிக்குறிச்சியில் மளிகை கடை மற்றும் துணிக்கடை, அசாவீரன்குடிக்காடு கிராமத்தில் மளிகை கடை ஆகிய 6 கடைகளுக்கும் ‘சீல்‘ வைக்கப்பட்டது. ஒரே நாளில் 7 கடைகளுக்கு ‘சீல்‘ வைக்கப்பட்டுள்ளது செந்துறை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆண்டிமடம் கடைவீதியில் ஆண்டிமடம் தாசில்தார் தேன்மொழி, வட்டார மருத்துவ அலுவலர் அசோகசக்கரவர்த்தி, போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் ஆகியோர் ஆய்வு செய்தபோது, அப்பகுதியில் உள்ள ஒரு மருந்து கடையில் சமூக இடைவெளி கடைபிடிக்கப்படாமல் பொதுமக்களுக்கு மருந்துகள் வழங்கியதை பார்த்தனர். இதையடுத்து அதிகாரிகள் அந்த மருந்து கடையை பூட்டி ‘சீல்‘ வைத்தனர். அப்போது போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மதன்குமார் மற்றும் போலீசார் உடனிருந்தனர்.

Next Story