ஊரடங்கு உத்தரவால் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன: சேலத்தில் சந்து கடைகளில் மதுவிற்பனை அமோகம்


ஊரடங்கு உத்தரவால் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன: சேலத்தில் சந்து கடைகளில் மதுவிற்பனை அமோகம்
x
தினத்தந்தி 5 April 2020 3:30 AM IST (Updated: 5 April 2020 8:42 AM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் ஊரடங்கு உத்தரவால் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் சந்து கடைகளில் மதுவிற்பனை அமோகமாக நடந்து வருகிறது.

சேலம்,

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் வருகிற 14-ந் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதன் காரணமாக அனைத்து தொழில் நிறுவனங்களும், கடைகளும் மூடப்பட்டுள்ளன. தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவையொட்டி அரசு நடத்தி வரும் டாஸ்மாக் மதுக்கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதனால் மது பிரியர்கள் தங்களுக்கு பிடித்தமான மது வகைகளை அருந்த முடியாமல் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் பல்வேறு சிரமத்திற்கு ஆளாகி வருகிறார்கள்.

சேலம் மாவட்டத்தில் 211 டாஸ்மாக் கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. இதனால் மதுக்கடைகள் அடைப்பதற்கு முந்தைய நாள் தேவையான மதுபாட்டில்களை சிலர் வாங்கி பதுக்கி வைத்துள்ளனர். இதனால் கடந்த மாதம் 24-ந் தேதி அந்தந்த பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில் சிலர் பெட்டி பெட்டியாக மதுபாட்டில்களை மொத்தமாக விலைக்கு வாங்கிச் சென்று போலீசாருக்கு தெரியாமல் பதுக்கி வைத்து தினமும் மறைவான இடத்தில் விற்பனை செய்து வருகின்றனர்.

தற்போது மது பாட்டில்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுவதால், இதை பயன்படுத்தி சந்து கடைகளில் ரூ.100 மதிப்புள்ள ஒரு குவார்ட்டர் ரூ.350-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஊரடங்கு உத்தரவையொட்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருவதால், அதை பயன்படுத்தி சேலத்தில் தற்போது மதுவிற்பனை அமோகமாக நடந்து வருகிறது.

குறிப்பாக சேலம் கிச்சிப்பாளையம் பகுதியில் 4 இடங்களில் இரவு நேரங்களில் மதுபான விற்பனை ஜோராக நடைபெற்று வருவதாக மது பிரியர்கள் தெரிவித்தனர். மதுவிற்பனையை தடுக்க போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

Next Story