கொரோனா எதிரொலி: அரசுஆஸ்பத்திரியில் இருந்து குழந்தையுடன் தப்பிய நரிக்குறவ தம்பதி - போலீசார் பிடித்து மீண்டும் மருத்துவமனையில் சேர்த்தனர்
கொரோனா வைரஸ் காரணமாக பிறந்த குழந்தையுடன் அரசு ஆஸ்பத்திரியில் இருந்து யாருக்கும் தெரியாமல் வெளியேறிய நரிக்குறவ தம்பதி போலீசாரிடம் சிக்கினர். அவர்கள் மீண்டும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
திருப்பத்தூர்,
வாணியம்பாடியை அடுத்த நிம்மியம்பட்டு பகுதியை சேர்ந்தவர் சாந்தாராம் (வயது 30). இவரது மனைவி மலர் (25). நரிக்குறவர்கள். அதே பகுதியில் உள்ள மரத்தடியில் வாழ்க்கை நடத்தி வருகின்றனர். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த மலருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரசவவலி ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து அவர் நிம்மியம்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை எடை குறைவாக இருந்ததால், திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு மலர் மற்றும் குழந்தை அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. தற்போது அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா தடுப்பு நடவடிக்கை பணிகள் நடைபெற்று வருவதால், உறவினர்கள் யாரையும் ஆஸ்பத்திரிக்குள் அனுமதிப்பதில்லை.
இதனால் சாந்தாராம், மலர் ஆகிய 2 பேரும் யாருக்கும் தெரியாமல் குழந்தையை தூக்கிக்கொண்டு வெளியே செல்ல திட்டமிட்டனர். அதன்படி இருவரும் குழந்தையுடன் ஆஸ்பத்திரியை விட்டு வெளியேறி ஆசிரியர்நகர் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது, அந்தப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களை மறித்து விசாரித்தனர்.
விசாரணையில், அவர்கள் ஆஸ்பத்திரி நிர்வாகத்திற்கு தெரியாமல் வந்ததும், தங்களது இருப்பிடத்துக்கு நடந்து செல்வதாகவும் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து அவர்கள் தொண்டு நிறுவன வாகனத்தில் நிம்மியம்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு மலருக்கும், குழந்தைக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Related Tags :
Next Story