அரசு மருத்துவமனைகளில் தேவையான அளவுக்கு மருந்து, படுக்கை வசதிகள் உள்ளன - அமைச்சர் கே.சி.வீரமணி தகவல்


அரசு மருத்துவமனைகளில் தேவையான அளவுக்கு மருந்து, படுக்கை வசதிகள் உள்ளன - அமைச்சர் கே.சி.வீரமணி தகவல்
x
தினத்தந்தி 4 April 2020 10:15 PM GMT (Updated: 5 April 2020 4:00 AM GMT)

அரசு மருத்துவமனைகளில் தேவையாள அளவுக்கு மருந்து மற்றும் படுக்கை வசதிகள் உள்ளதாக அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்தார்.

அரக்கோணம்,

அரக்கோணம் அரசினர் மருத்துவமனையில் அமைச்சர் கே.சி.வீரமணி நேற்று ஆய்வு செய்தார். அப்போது அரக்கோணம் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து வேலூர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் சு.ரவி.எம்.எல்.ஏ, அமைச்சரிடம் விளக்கிக் கூறினார்.

பின்னர் அமைச்சர் கே.சி.வீரமணி பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அரக்கோணம் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பணி சிறப்பாக உள்ளது. அரசு மருத்துவமனையில் தேவையான அளவிற்கு மருந்துகளும், படுக்கை வசதிகளும் உள்ளன. 24 மணி நேரமும் டாக்டர்களும், நர்சுகளும் பணியில் தயார் நிலையில் உள்ளனர்.

வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் டாக்டர்கள், சுகாதார பணியாளர்கள் இரவு பகலாக கொரோனா ஒழிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கொரோனாவில் இருந்து தப்பித்துக் கொள்வதற்கு அனைவரும் வீட்டில் இருக்க வேண்டும், தனித்திருக்க வேண்டும், விலகியிருக்க வேண்டும்.

பிரதமர் மோடி கூறியது போல் வீட்டில் விளக்கு ஏற்ற வேண்டும். ‘டார்ச்’ லைட்டை ஒளிரச் செய்ய வேண்டும். டெல்லி சென்று திரும்பியவர்களில் சிலருக்கு கொரோனா அறிகுறி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களுடைய குடும்பங்களும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. அனைவரும் ஒற்றுமையாக இருந்தால் கொரோனாவை ஒழித்து விடலாம்.

இவ்வாறு அமைச்சர் கே.சி.வீரமணி கூறினார்.

அப்போது அரக்கோணம் நகர அ.தி.மு.க. செயலாளர் பாண்டுரங்கன், ஒன்றிய செயலாளர் பிரகாஷ், காவேரிப்பாக்கம் வடக்கு ஒன்றிய செயலாளர் பழனி, அரக்கோணம் நகர வங்கி தலைவர் ஷியாம்குமார், மாவட்ட பிரதிநிதி ஏ.எம்.நாகராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.

வாலாஜா அரசு மருத்துவமனையிலும் அமைச்சர் கே.சி.வீரமணி ஆய்வு செய்தார். அப்போது இதுவரையில் வார்டுகளில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள், தேவைப்படும் வசதிகள் குறித்து கலெக்டர் திவ்யதர்ஷினியிடம் கேட்டறிந்தார்.

இதேபோல சோளிங்கர் அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து அமைச்சர் கே.சி.வீரமணி ஆய்வு மேற்கொண்டார். அப்போது தலைமை மருத்துவர் பாரியிடம் மருத்துவமனையில் செய்யப்பட்டுள்ள கொரோனா பாதுகாப்பு குறித்து கேட்டறிந்தார்.

ஆய்வின் போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகனன், எம்.எல்.ஏ.க்கள் சு.ரவி, ஜி.சம்பத். சோளிங்கர் பேரூராட்சி முன்னாள் தலைவர் ஏ.எல்.விஜயன், சோளிங்கர் ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலாளர் எஸ்.நரசிம்மன், நகர செயலாளர் ராமு ஆகியோர் உடனிருந்தனர்.

Next Story