கொரோனா பாதிப்பு: புதுச்சேரி பாதுகாப்பாக உள்ளது - கவர்னர் கிரண்பெடி சொல்கிறார்


கொரோனா பாதிப்பு: புதுச்சேரி பாதுகாப்பாக உள்ளது - கவர்னர் கிரண்பெடி சொல்கிறார்
x
தினத்தந்தி 5 April 2020 10:54 AM IST (Updated: 5 April 2020 10:54 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா பாதிப்பில் பிற மாநிலங்களை விட புதுச்சேரி பாதுகாப்பாக உள்ளதாக கவர்னர் கிரண்பெடி தெரிவித்துள்ளார். புதுச்சேரி கவர்னர் கிரண்பெடி சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

புதுச்சேரி,

கொரோனா பாதிப்பை பொறுத்தவரை புதுச்சேரி மற்ற மாநிலத்தை விட ஆரோக்கியமாகவும், பாதுகாப்பாகவும் உள்ளது. இதற்கு காரணம் அரசு கூறிய கருத்துக்களை கேட்டு பொதுமக்கள் தங்கள் வீட்டுக்குள்ளேயே இருப்பது தான். டாக்டர்கள், காவல் துறையினர் உள்பட அனைத்து அரசு அதிகாரிகளும் தங்கள் பணிகளை சிறப்பாக செய்து வருகின்றனர். அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். கொரோனா வைரசுக்கு எதிரான யுத்தத்தில் பொறுமையும், நம்பிக்கையும் தான் முக்கியம். அதை நாம் கடை பிடித்தால் கொரோனாவை எளிதாக வெல்லலாம். இந்த கிருமி மனிதனால் தான் உருவாக்கப்பட்டது. அதனை அழிக்கும் சக்தி நம்மிடம் உள்ளது. அதை செய்ய வேண்டும்.

புதுவை மாநிலத்தில் மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்க அரசு காலை 6 மணி முதல் மதியம் 2.30 மணி வரை நேரக் கட்டுப்பாடு நிர்ணயம் செய்துள்ளது. இந்த நேரத்தில் நாம் கடைகளுக்கு சென்று பொருட்களை வாங்கி கொள்ளலாம். கடைகளுக்கு செல்லும்போது கூட்டமாக செல்லாமல் தனித்தனியாக செல்ல வேண்டும். கடைகளில் பொருட்கள் வாங்கும் போதும் அங்கு சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் தடையில்லாமல் கிடைக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. பொதுமக்களுக்கு ஏதாவது குறைபாடுகள் இருந்தால் 104, 1031 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம். பொதுமக்கள் தங்கள் வீடுகளில் இருக்கும் நேரத்தை பயனுள்ளதாக செலவு செய்யலாம். ஆன்மிக புத்தகங்கள் படிக்கலாம், யோகா பயிற்சி செய்யலாம். மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பாடம் கற்பிக்கப்படுகிறது. அவர்கள் அதன்மூலம் பயன்பெறலாம்.

மத்திய அரசு மாநில அரசின் மூலம் ஏழை, எளிய மக்கள் பயன் பெறுவதற்காக அவர்களது வங்கிக்கணக்கில் நிவாரண தொகை செலுத்தி உள்ளது. அதன்மூலம் அவர்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொள்ளலாம். பொதுமக்கள் பொருட்களை வாங்க செல்லும்போது சிரமம் ஏற்பட்டால் நிர்வாகம் சார்பில் அவர்களுக்கு உதவி செய்வதற்காக தனியாக எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அதனை பயன்படுத்தி அவர்கள் வீட்டில் இருந்த படியே பொருட்களை பெற்றுக்கொள்ளலாம்.

பிரதமர் மோடி கொரோனாவை ஒழிக்க பொதுமக்கள் அனைவரும் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தும் விதமாக இன்று (ஞாயிற்றுக் கிழமை) இரவு 9 மணிக்கு தங்கள் வீடுகளில் விளக்குகளை அணைத்துவிட்டு 9 நிமிடம் மெழுகுவர்த்தி, அகல் விளக்குகள், டார்ச் லைட், செல்போன் லைட் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை ஒளிரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். இதனை பொதுமக்கள் அனைவரும் கடை பிடிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story