தேனியில், சமூக இடைவெளியை பின்பற்றாமல் மக்கள் அலட்சியம் - காய்கறி வாங்க கடைகளில் முண்டியடிப்பு


தேனியில், சமூக இடைவெளியை பின்பற்றாமல் மக்கள் அலட்சியம் - காய்கறி வாங்க கடைகளில் முண்டியடிப்பு
x
தினத்தந்தி 5 April 2020 5:24 AM GMT (Updated: 5 April 2020 5:24 AM GMT)

தேனியில் சமூக இடைவெளியை பின்பற்றாமல் மக்கள் அலட்சியம் செய்வது தொடர்கதையாகி வருகிறது. ஆபத்தை உணராமல் காய்கறி வாங்க கடைகளில் முண்டியடிக்கின்றனர்.

தேனி,

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க மக்கள் சமூக இடைவெளி எனப்படும் தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்று அரசு வலியுறுத்தி வருகிறது. இதற்காக காய்கறி, மளிகை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விற்பனை கடைகள், மருந்து கடைகளின் முன்பு இடைவெளி ஏற்படுத்தி நிற்க கோடுகள் வரையப்பட்டு உள்ளன. ரேஷன் கடைகளின் முன்பும் கோடுகள் வரையப்பட்டு உள்ளன.

ஆனால் தேனியில் மக்கள் சிலர் சமூக இடைவெளியை பின்பற்றிய போதிலும், சில இடங்களில் சமூக இடைவெளி பின்பற்றப்படுவது இல்லை. தெருக்களில் கூட்டம், கூட்டமாக நின்று மக்கள் பேசிக்கொண்டு இருப்பதை பார்க்க முடிகிறது. தேனி கர்னல் ஜான் பென்னிகுவிக் பஸ் நிலையம் தற்காலிக உழவர் சந்தையாக மாற்றப்பட்டு உள்ள நிலையில், அங்கு காய்கறி வாங்குவதற்கு ஆயிரக்கணக்கான மக்கள் வருகின்றனர்.

நேற்று அங்கு காய்கறி வாங்குவதற்கு வந்த மக்கள் பலரும் சமூக இடைவெளியை பின்பற்றாமல், முண்டியடித்து கொண்டு காய்கறிகள் வாங்கினர். போலீசார் எச்சரித்தும் கேட்காமல் பலரும் காய்கறிகளை வாங்குவதில் கவனம் செலுத்தினர். அதுபோல், தேனி சமதர்மபுரத்தில் வனச்சரகர் அலுவலகம் எதிரே உள்ள ரேஷன் கடையில் நிவாரண தொகை மற்றும் நிவாரண பொருட்கள் வாங்குவதற்காக காலை 7 மணிக்கே மக்கள் கூடினர். கடையின் முன்பு இடைவெளிவிட்டு மக்கள் வரிசையில் நிற்பதற்காக வட்டம் போடப்பட்டு இருந்தது. ஆனால், அந்த வட்டத்துக்குள் பொதுமக்கள் தாங்கள் கொண்டு வந்த பைகளை வைத்துவிட்டு, சாலையோரம் இருந்த கடைகளின் முன்பு அமர்ந்தும், ஆங்காங்கே கூடி நின்றும் கதை பேசிக்கொண்டு இருந்தனர்.

இதற்கிடையே மாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேனி அல்லிநகரமும் ஒன்றாக உள்ளது. அப்படி இருக்கையில், இன்னும் மக்களிடம் சமூக இடைவெளி குறித்த விழிப்புணர்வு இன்றி, அலட்சியமாக பொது இடங்களில் நடந்து கொள்கின்றனர். எனவே பொதுமக்கள் ஆபத்தை உணர்ந்து, ஊரடங்கு உத்தரவு மற்றும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். 

Next Story