5 பேருக்கு கொரோனா: நாகையில், 6 வார்டுகளுக்கு ‘சீல்’


5 பேருக்கு கொரோனா: நாகையில், 6 வார்டுகளுக்கு ‘சீல்’
x
தினத்தந்தி 5 April 2020 5:25 AM GMT (Updated: 5 April 2020 5:25 AM GMT)

5 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து நாகையில், 6 வார்டுகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளது.

நாகப்பட்டினம்,

டெல்லியில் நடந்த மாநாட்டில் கலந்து கொண்ட பலருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. இதையடுத்து அந்த மாநாட்டில் தமிழகத்தில் இருந்து கலந்து கொண்டவர்கள் விவரம் சேகரிக்கப்பட்டது. இதில் நாகை மாவட்ட பகுதிகளில் இருந்து 31 பேர் மாநாட்டில் கலந்து கொண்டது தெரியவந்தது.

இவர்களில் 19 பேரின் ரத்த மாதிரி கொரோனா பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதில் நாகை, நாகூர், பொரவச்சேரி ஆகிய பகுதிகளை சேர்ந்த 5 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது நேற்று முன்தினம் கண்டறியப்பட்டது. இந்த நிலையில் நாகையில் 3 வார்டுகள், நாகூரில் 3 வார்டுகள் என 6 நகராட்சி வார்டுகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளது.

‘சீல்’ வைக்கப்பட்ட பகுதிகளில் வெளி ஆட்கள் நுழையாமல் இருப்பதற்காக மூங்கில், இரும்பிலான தகரம் ஆகியவற்றை கொண்டு தடுப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அங்கு ‘தடை செய்யப்பட்ட பகுதிகள்’ என மாவட்ட நிர்வாகம் சார்பில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. 6 வார்டுகளிலும் 20-க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன.

இந்த தெருக்களில் போலீசார் தொடர்ந்து ரோந்து சென்ற வண்ணம் உள்ளனர். ஒலிபெருக்கி மூலம் ‘தடை செய்யப்பட்ட பகுதி, யாரும் வெளியில் வரவேண்டாம்’ என்றும் அறிவிப்பு செய்யப்பட்டு வருகிறது. இந்த பகுதியை சேர்ந்தவர்களுக்கு காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வீட்டிற்கே சென்று வழங்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

Next Story
  • chat